ஒரு வருஷத்துக்கு மேலேயே தூங்கிட்டீங்க, ப்ளீஸ் எழுந்திருங்க என்று பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி.க்கு மெட்ராஸ் ஹைகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாவட்ட பத்திரப்பதிவு பதிவாளர், சார் பதிவாளருக்கு எதிரான நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது உறுதி செய்யப்பட்ட நிலையில்தான் இப்படி கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது ஐகோர்ட்.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குனருக்கு கடந்த ஆண்டு ஒரு புகார் மனுவை அனுப்பியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த எழுபது வயது முதியவர் நாராயணசாமி. புகார் மனு விபரம் : ‘எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான விவசாய நிலம் கோவை, குமாரபாளையம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ரியல் எஸ்டேட் தரகர்கள் அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். மேற்படி மோசடிக்கு கோவை மாவட்ட பத்திரப்பதிவுத்துறை பதிவாளர் சுரேஷ்குமார், சார் பதிவாளர் எஸ். கார்த்திகேயன் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டுள்ளனர். நிலத்தை அபகரிக்க போலி வாரிசு சான்றிதழை அந்த கும்பல் கொடுத்துள்ளது. மோசடி கும்பலுக்கு துணை போன இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – இதுதான் புகார்மனு!
பெரியவர் நாராயணசாமி கொடுத்த புகார் மனு ஓராண்டு கடந்தும் அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் அது குறித்து மெட்ராஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி ஆர்.எம். டி.டீக்காராமன் முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பெரியவர் நாராயணசாமி கொடுத்த புகாரை, பத்திரப்பதிவுத் துறை ஐ.ஜி. க்கு கடந்த ஆண்டு (2021) மே மாதம் 31-ந்தேதி பரிந்துரைத்ததாக அரசு தரப்பு அப்போது விளக்கம் அளித்தது.
வழக்கின் மீது நீதிபதி பிறப்பித்த உத்தரவு :
“வாரிசு சான்றிதழ் கொடுத்து நிலத்தை மோசடி கும்பல் பத்திரப்பதிவு செய்துள்ளது. அதுமட்டுமல்ல, நிலத்தின் மதிப்பை குறைவாக காட்டி அரசுக்கு சுமார் 4 லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர் என மனுதாரர் கூறியுள்ளார்
அந்த புகாரை பதிவுத்துறை ஐ.ஜி.க்கு, போலீசார் பரிந்துரை செய்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால், அந்த புகாரின் மீது பதிவுத்துறை ஐ.ஜி. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக அரசு வக்கீல் கால அவகாசம் கேட்கிறார். மாவட்ட பதிவுத்துறை பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு தடுப்புச்சட்டத்தின் கீழ் தீவிரமான புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், அந்த புகார் மீது பதிவுத்துறை ஐ.ஜி. ஓர் ஆண்டுக்கு மேலாக படுத்து தூங்கிக் கொண்டிருப்பது போல தெரிகிறது. வழக்கை ஜூலை 7-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அன்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும்”
இவ்வாறு நீதிபதி ஆர்.எம். டி.டீக்காராமன் கூறியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும், இப்படியான பாதிப்புக்கு ஆளான நூறு நாராயணசாமிக்கள் இருக்கிறார்கள், அவர்கள் யாரும் பெரியவர் கோவை நாராயணசாமி போல துணிவுடன் முன் வருவது இல்லை. பொதுமக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அன்றாடம் சந்திக்கிற காவல்துறை ஊழியர்கள் மட்டுமே பிரச்சினைக்குரிய நபர்கள் என்ற பொது புத்தி இருக்கிறது; அது மாற வேண்டும். உள்ளாட்சி, நகரமைப்பு, மின்துறை, போக்குவரத்து, பொதுப்பணி என்று சிவில் சைடில் பலநூறு பிரச்சினைகளை நாளும் மக்கள் சந்தித்தபடியே அதை கடந்து போய் விடுகிறார்கள். நாடெங்கிலும் நாராயணசாமி போன்றோரே தேவைப்படுகிறார்கள்… நாராயணசாமிக்கள் முன் வந்தால்தான் நீதியரசர்களும் உரிய குட்டு வைப்பார்கள்… சேரான்