கதறவிடும் கொரியர் சேவை… தனியார் லட்சணம் !

சத்தமே இல்லாமல் அஞ்சலக சேவையை ஓரங்கட்டிவிட்டு தபால் சேவை (?)யில் முன்னணியில் இருக்கிறது கொரியர் சர்வீஸ்.
இத்தனைக்கும் கட்டணம், சேவை என்று எந்த வகையிலும் இந்திய அஞ்சல்துறை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு குறை வைத்தது இல்லை. கடிதமோ, மணி ஆர்டரோ, பொருட்களை பார்சல் அனுப்புதலோ அனைத்திலும் சேவைக் கட்டணம் அஞ்சல்துறையில் குறைவுதான்!
நாட்டில் இன்று அஞ்சலக சேவைக்கு இணையாக அலுவலகங்களை வைத்துக் கொண்டு இருக்கிறது கொரியர் நிறுவனங்கள். அஞ்சலகம் கையில் வைத்துள்ள வானூர்தி சர்வீஸ், கப்பல் சர்வீஸ், ரயில் சர்வீஸ், கார்கோ சர்வீஸ் என்று எல்லாமும், இப்போது தனியார் கொரியர் சர்வீஸ்களிடமும் இருக்கிறது.
ஒரு சில கொரியர் சேவைகளில் எனக்கும் நட்பு வட்டங்களில் பலருக்கும் ஏற்பட்ட அனுபவங்களை சொல்வதே இந்தப் பதிவு !
நண்பர் ராஜசேகருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை மட்டும் சொல்கிறேன் ! கொரியர் நிறுவனத்துக்கும், அவருக்கும் நடந்த உரையாடல் !


“எனக்கு ஒரு கொரியர் வந்திருக்கு சார்… போன் பண்ணியிருக்காங்க, ட்ராவல்ல இருந்ததால அட்டெண்ட் பண்ணல. மிஸ்டு கால்ல பாத்துட்டு அடுத்த நாள் போன் பண்ணி, ‘யாருங்க போன் பண்ணது?’ ன்னு கேட்டப்பதான் கொரியர் சர்வீஸ்ல கூப்பிட்டது தெரிஞ்சுது. விஷயத்தைக் கேட்டேன். ‘உங்களுக்கு ஒரு கொரியர் பார்சல் வந்திருந்தது. போன் பண்ணிப் பாத்தோம், நீங்க எடுக்கல, ரிட்டன் அனுப்பிட்டோம்’ என்றனர். ‘பார்சல்லதான் என்னோட அட்ரஸ் இருக்கே, அங்க போயிருந்தா, வீட்ல யாராவது இருந்திருப்பாங்க பார்சல கொடுத்து இருக்கலாமே?’ என்றேன்.
‘அதெல்லாம் எங்களுக்கு உத்தரவு இல்லங்க, போன் பண்ணி, ஆள் எடுக்கலன்னா, ஆபீஸ்க்கு கொரியர் போயிடும்… ரெண்டு நாள் பார்த்துட்டு அனுப்புனவங்களுக்கே அதை ரிட்டர்ன் பண்ணிடுவோம்’
‘இப்ப நான் மிஸ்டு கால் பாத்துட்டு உங்களுக்கு போன் பண்ணாம இருந்திருந்தா, எனக்கு பார்சல் கொரியர் வந்த விஷயமே தெரிஞ்சிருக்காதே?’
‘சார், அது எங்க ஃபால்ட் கிடையாது. போன் உங்களது. சர்வீஸ் எங்களது. எங்க சர்வீஸ்ல ஒன்னுதான் போன் பண்றது. பண்ணோம், நீங்க எடுக்கல’…
‘சரி, கொரியரை ரிட்டர்ன் அனுப்பியிருக்கீங்களே, அனுப்புனவருக்கு சார்ஜை திரும்பக் கொடுத்துடுவீங்களா?’
‘அதுக்கு வாய்ப்பில்லே சார்… பியூச்சர்ல, ராங்க் அட்ரஸ்க்கு கொரியர் அனுப்பி அது ரிட்டன் ஆச்சுன்னா, அனுப்புனவருக்கிட்ட ரிட்டன் கொடுக்குற சார்ஜையும் சேர்த்து வாங்கவும் திட்டமிருக்கு’…
நண்பருக்கும், அவருக்கு பார்சல் அனுப்பிய அன்பருக்கும் ஆறுதல் சொல்வதைத் தவிர வேறென்ன நம்மால் முடியப்போகிறது ?


இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அஞ்சலகத் துறைக்கு நூற்றைம்பது ஆண்டுகால சேவை என்கிற பெருமையும் இருக்கிறது.1 லட்சத்து ,55 ஆயிரம் அஞ்சலகங்கள் நாட்டில் உள்ளது. வங்கிகளைப் போன்றே வங்கி சேவை, சிறு சேமிப்பு திட்டங்கள் என பல்வேறு அம்சங்கள், அஞ்சல்துறையிலும் இருக்கிறது.

அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் பங்குபெறவும் வழிமுறைகள் எளிதுதான். அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்கு வைக்க (தொடங்க) ரூ.500, தேசிய சேமிப்பு தொடர் வைப்பு நிதி திட்டம் – ரூ.100, மாதாந்திர வருமான திட்டம் – ரூ.1000,
டைம் டெபாசிட் அக்கவுண்ட் – ரூ.1000, பொது வருங்கால வைப்பு நிதி – ரூ.500, சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் – ரூ.250, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் – ரூ.1000, தேசிய சேமிப்பு பத்திரம் – ரூ.1000, கிசான் விகாஸ் பத்திரம் – ரூ.1000 – என்றளவில் ஏழைக்கும் எட்டும் கனியாகவே அஞ்சலகம் திகழ்கிறது.

தேசிய மயமாக்கப்பட்ட அஞ்சலக சேவையில் ஏதாவது குறைபாடு என்றால், பொதுமக்கள் பொங்கும் பொங்கு இருக்கிறதே, அபாரம் ! அதுவே தனியார்களின் கைகளில் இருக்கும் கொரியர் சர்வீஸ்களில் ஏதாவது குறைபாடு என்றால் சத்தமே இல்லாமல் நவதுவாரங்களையும் அடைத்துக் கொண்டு அமைதி காத்து நிற்பார்கள்.
வேலை நேரத்தில் ஆட்கள், ‘சீட்’ டில் இருப்பது கிடையாது, அப்படியே இருந்தாலும் சலித்துக்கொண்டு பொதுமக்களின் தபால்களை வாங்குவது, இன்னபிற சேவைகளை அளிப்பது என்று பொது அஞ்சலகத்துறையின் பெரும்பாலான கிளைகள் செயல்பட்டதின் விளைவே இன்றைய புற்றீசல் கொரியர் சேவைகள்…
எப்போதும் அடிமைப்புத்தியை கைவிட்டு விடாத நம்ம மக்களில் சிலர், இப்போது அதே வேதனையை தனியார் கொரியர் சேவைகளிலும் அனுபவிக்கின்றனர். அஞ்சலக அதிகாரிகளையாவது மிரட்டி, உருட்டி ஏதாவது சத்தம் போட்டு, ‘இப்படி செய்திருக்கலாமே, ஏன் அப்படி செய்தீர்கள்?’ என்று கேள்வி கேட்டவர்கள், இப்போது கொரியர் ஆபீஸ்களில் மவுனித்து நிற்கிறார்கள்.

அவனவனுக்கு வரக்கூடிய தனி சொரணைதான் பல விஷயங்களுக்கு தீர்வாக இருக்கமுடியும் என்பதால், எதிர் வரக்கூடிய எதிர்கால சொரணைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பதே இப்போதைக்கு சிறப்பு என்று கருதுகிறேன் !

எதற்கெடுத்தாலும் தனியார் மயம், தனியார் மயம் என்று கம்பிகட்டும் மகா மனிதர்களுக்கு மட்டும் சில கொரியர் சர்வீஸ்களின் சேவை இனிக்கத்தான் செய்கிறது – டிசைன் அப்படி !
ந.பா.சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *