திருவள்ளூர் மாவட்ட, பொன்னேரி நீதிமன்ற வட்டத்தில் இருந்த 13 கிராமங்களை, மாதவரம் தாலுகா நீதிமன்றத்தில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் இருந்த 13 கிராமங்களை தமிழக அரசு உத்தரவின் பேரில் மாதவரம் நீதிமன்ற வட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. புதிதாக சொத்து விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடர வேண்டுமென்றால், அதற்கான, ஆவணங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள தாலுக்கா அலுவலகங்களில் தான் சேகரிக்க முடியும்…
அப்படி இருக்க ஒரு தாலுகாவில் உள்ள கிராமங்களை வேறொரு தாலுக்கா நீதிமன்றத்திற்கு மாற்றினால் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி, வழக்காரிகளும் (மனு தாரர்கள்) பாதிக்கப்படுவார்கள் என்பதால், ஏற்கனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டு கோரிக்கையும் வைத்துள்ளனர். இருப்பினும் இந்த மாற்றம் நடைமுறைக்கு வருவது உறுதியானது. அதோடு அரசின் உத்தரவில் எந்த மாற்றமும் ஏற்படாததால், வழக்கறிஞர்கள் தமிழக அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, நீதிமன்றம் வந்தனர். அப்போது இதுகுறித்து கூறிய ஸ்ரீதர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், “கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறாவிட்டால் பல்வேறு வடிவங்களில் எங்களது போராட்டம் தொடரும்” என எச்சரித்துள்ளனர்.
பொன்.கோ.முத்து