கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி விற்றதாக 19 பேரை, சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டிருந்தார். போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive against Drugs) என்ற திட்டத்தின் மூலம் சிறப்பு சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார், 10.06.2022 முதல் 16.06,2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் 19பேர் கைதாகினர். 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளிடமிருந்து, 25.640 கிலோ கஞ்சா, 42 போதை மாத்திரைகள், நகை மற்றும் பணம் ரூ.11லட்சத்து 2700 – ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை
வியாசர்பாடி, பி.வி. காலனியில், கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ரமா (எ) அறுப்பு ரமாவிடமிருந்து மட்டுமே 16 கிலோ கஞ்சாவும் ரூ.1,12,700/-ம் பறிமுதல் செய்யப்பட்டது. ரமா (எ) அறுப்பு ரமா மீது, செம்பியம் காவல் நிலையத்தில் இதே போல் மூன்று கஞ்சா வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல் முகப்பேர் வின்சென்ட் என்பவர் கஞ்சா விற்றதாக கைதாகினார். அவரிடமிருந்து 4.1 கிலோ கஞ்சா, கார் மற்றும் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.
காசிமேடு அடுத்த மீன்பிடி துறைமுகம் பகுதியில் போதை மாத்திரைகள் வைத்திருந்த ஸ்டீபன் (எ) மூணுதலை ஸ்டீபன், முத்து (எ) தேசமுத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 21 MDMA என்ற போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. புதுவண்ணாரப்பேட்டை பகுதியிலும் அதேபோல் போதை மாத்திரைகள் வைத்திருந்த. சீனு (எ) சீனிவாசன், ராகுல் பிடிபட்டனர் 21 MDMA என்ற போதை மாத்திரைகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. விகடகவி எஸ். கந்தசாமி