உலகளாவிய ஆணழகன் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டு காவல்துறையின் முதல் (தலைமை) காவலர் சென்னையில் பணியாற்றும் புருசோத்தமன் என்பது சிறப்பான ஒன்று.
ஆசிய ஆணழகன் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கும் புருசோத்தமன், சென்னை கிண்டி போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலராகப் பணியாற்றுகிறார்.
தேசிய அளவிலான போட்டிக்கும் உலகளாவிய போட்டிக்கும் தயாராகும் போதெல்லாம் சொந்த சேமிப்பில் கொஞ்சமும், கடன்வாங்கிக் கொஞ்சமுமாக பயணச் செலவினங்களை நேர்செய்து வந்திருக்கிறார் சகோதரர் புருசோத்தமன்.
தமிழ்நாட்டுக் காவல்துறையில் அத்லெட்டில் விருதுகளை இன்னமும் குவித்துக் கொண்டேயிருக்கும் திருமதிகளான போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, காஞ்சனா, மஞ்சுளா, ரேவதி மற்றும் கான்ஸ்டபிளாக சேர்ந்து இருபது ஆண்டுகளுக்குப் பின் ஏட்டய்யாவாக மாறியிருக்கும் எம். மாரியப்பன் (தேசிய குத்துச்சண்டை வீரர்), ஏராளமான பிளாக் பெல்ட்களை வாங்கியும் சர்வீஸ் காரணமாக சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டய்யா என்றளவில் தகுதி பெற்றிருக்கும் பலரை இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்டுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
சகோதரர் புருசோத்தமன் திறமையை ஊக்குவிக்கும் வகையில் காவல்துறையில் பணியாற்றும் அதிகாரி அந்தஸ்தை அடையாத காவலர்கள், முதல்நிலை காவலர்கள், ஏட்டய்யாக்கள் ‘வாட்சப்’ குழுக்களை அமைத்து நிதி திரட்டி உதவி வருகிறார்கள். பதக்கத்தோடு தாய்நாட்டுக்கு திரும்பும் போது சில காவல் அதிகாரிகள் (இன்றைய டிஜிபி சைலேந்திரபாபுவும் அப்படி உதவியிருக்கிறார்), புருசோத்தமன்களைப் பாராட்டுவதும்- உதவுவதும் இயல்பாக நடக்கிறது. தமிழ்நாட்டுக் காவல்துறை சார்பில் சென்றார்கள், வென்றார்கள், வந்தார்கள் என்று எந்த விளையாட்டின் வெற்றிவீரர்களையும் தமிழ்நாட்டுப் போலீஸ் சொந்தம் கொண்டாட முடியாது. போலீசார், ‘ஸ்போர்ட்ஸ் மீட்’ களில் பங்கேற்க துறைரீதியான (சம்பளத்துடன் கூடிய) விடுப்பு கூட சாத்தியமில்லாத ஒன்றுதான். இதுவே இப்படியென்றால் அவர்களுக்கான சத்தான உணவு, உடைகள், காலணிகள் பற்றி யோசிப்பதே தவறுதான். காவல்துறையில் செய்யவேண்டிய சீர்திருத்தங்களில் இதுவும் ஒன்று !
தமிழ்நாடின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின், இதையும் கொஞ்சம் கருத்தில் கொண்டால் அத்லெட் உள்ளிட்ட சகல விளையாட்டுப் போட்டிகளிலும் தமிழ்நாட்டுப் போலீசார் ஜொலிக்கலாம். ‘சம்பள உயர்வு, பதவி உயர்வு, பயணச் செலவு, உடை – உணவு’ விஷயங்களை நீங்கள் நினைத்தால் சிறப்பாக்கிக் கொடுக்கலாம் முதலமைச்சர் அவர்களே… ந.பா.சேதுராமன்