சென்னையில் பிரமாண்டமாய் நடைபெறவிருக்கும் சர்வதேச அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., துணைத் தலைவர் கனிமொழி எம்.பி., தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து, விழாவில் பங்கேற்று சிறப்பித்துத் தரும்படி அழைப்பு விடுத்தனர்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை நடத்தும் முதல்நாடு இந்தியாவின் தமிழ்நாடு. 44 ஆவது ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி தொடர் ஓட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஜூன் 19-2022 அன்று, தில்லி இந்திராகாந்தி விளையாட்டரங்கில் தொடங்கி வைத்து பேசினார். ஒலிம்பியாட் ஜோதியை 40 நாட்களுக்குள் இந்தியாவின் 75 நகரங்களுக்கு கொண்டு சென்று இறுதி நாளில் மாமல்லபுரம் விழாவில், ஜோதி ஏற்றி வைக்கப்படுகிறது. ஜூலை 28-2022 நாளன்று தொடங்கி ஆகஸ்ட் 10-2022 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.
கிராண்ட் மாஸ்டர்கள் உள்பட சுமார் இரண்டாயிரம் வீரர்கள், 189 நாடுகளிலிருந்து பங்கேற்கும் இந்த விழா, இதுவரை நடந்த போட்டிகளிலேயே அதிக வீரர்களைக் கொண்ட விழா என்பது தனிச்சிறப்பு. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விழா சிறப்பாக நடந்தேற தொடர்ந்து ஆர்வம் காட்டிவருகிறார்.
மாமல்லபுரத்தின் பூஞ்சேரி கிராமத்திலுள்ள ஃபோர்பாய்ண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் 52 ஆயிரம் சதுர அடியில் நவீன சதுரங்க உள் விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டு வருவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனித்த அக்கறையை வெளிப்படுத்துகிற ஒன்று. உலகளாவிய சதுரங்கக் கூட்டமைப்பினர்,
பத்திரிகையாளர்கள், சிறப்பு பார்வையாளர்கள் தங்குவதற்கு வசதியாக இரண்டாயிரம் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் போட்டியை ரசிக்க டிஜிட்டல் திரைகள், எந்த உதவிக்கும் ஓடிவரவும், தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றவும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. ந.பா.சேதுராமன்