சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை தேய்க்கும் காலாவதி சரக்கு வாகனங்களால் நாளும் விபத்துகள் அதிகமாகி வருகிறது. வட்டார போக்குவரத்து அதிகாரிகளோ, போக்குவரத்து போலீசாரோ முக்கியத்துவம் அளித்து இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஆந்திரா, ஒடிசா, பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருகிற வாகனங்கள் ஒருபக்கம், அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஒருபக்கம் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்னை மார்க்கமாக வந்து செல்கின்றன. ஆந்திரா மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து செங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நவீன அரிசிஆலை களுக்கு நெல் மூட்டைகளை ஏற்றி வரும் – ஏற்றிச்செல்லும் லாரிகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்துக்கு மேல்தான்இருக்கும். அதேபோன்று கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து காய்கள், பழம், பூக்களை ஏற்றி வரும் வாகனங்களும் கணிசமான அளவில் இதே சாலைமார்க்கமாகவே வந்து செல்கின்றன. இந்நிலையில் அதிக சுமையை ஏற்றி வரும் சரக்கு வாகனங்களில் விதிமுறைகளை மீறி ஆட்களையும் ஏற்றி வருகின்றனர். குறிப்பாக காலாவதியான அதாவது செயலிழந்த வாகனங்களில் அதிக அளவில் சுமைகளை ஏற்றி வருவதால் சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்பட்டு அதிகளவு உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. அதேபோல் காலாவதி வாகனங்களில் இருந்து வெளியேறும் அதிகப்படியான கரும்புகையால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு, அதை சுவாசிக்கும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளும் ஏற்படுகிறது. ஆர்.டி.ஓ. அதிகாரிகளும் போலீசாரும் இணைந்து ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரவிழாவை நடத்துவதோடு எல்லாம் முடிந்து விடுவதாக எண்ணுவது ஆபத்தானது. சாலை போக்குவரத்துப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இணைந்து சுற்றுச்சூழல் கெடாதவாறு பார்த்துக் கொள்ள முதலில் செய்யவேண்டியது, காலாவதி வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதே…
நம்பி