குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நரிக்குறவர் இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்,, கும்மிடிப்பூண்டி அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் வார்டு உறுப்பினர் ஜோதி இளம்செல்வம் இந்த விஷயத்தை தொடர்ந்து கையிலெடுத்து போராடி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 11-வது வார்டு மேட்டு தெருவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு போன்றவை இந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் சார்பில் முதற்கட்டமாக. தொடக்கத்தில் 15 குடும்பத்தினருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இருப்பினும் தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, பொது கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து தர இதுவரை முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை நரிக்குறவ மக்கள் முன் வைக்கின்றனர். வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில்தான் பாமக பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஜோதி இளம் செல்வம் கடந்த வாரத்தில் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கவனத்துக்கு கொண்டு போனார். அப்போதும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாததால், மனம் உடைந்த நரிக்குறவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஜோதி இளம் செல்வம் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மேற்கொண்ட சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது. பேரூராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டமாக அது நீடித்தது. பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா, “கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி நடவடிக்கை எடுக்கிறோம்” என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. (நரிக்குறவர் சமூக இளைஞர் அஜீத் இது குறித்து விரிவாகவே பேசினார். பேட்டியும் வாழ்விடமும் வீடியோவாக) நரிக்குறவர் சமூக மக்களும் அவர்களின் பிள்ளைகளும் வாழும் பகுதியை நேரில் பார்க்கும் போது நமக்கு அடிவயிற்றில் என்னவோ செய்கிறது. இப்படிப்பட்ட சிதிலமடைந்த பகுதியில் பாதுகாப்பற்ற சூழலில் நாம் ஒரு நாளாவது வாழ முடியுமா என்றே யோசிக்க வைக்கிறது. அடிப்படை வசதி என்பது அடுத்த வேதனை. நரிக்குறவர் இன மக்களின் வாழ்க்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒளி விளக்கேற்ற வேண்டும் என்பதே நம்முடைய வேண்டுகோள்…
தொகுப்பு :தேனீஸ்வரன்.