திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்தது பூதூர் கிராமம்.
அங்கிருந்து சோழவரம் செல்லும் சாலையானது, குண்டும், குழியுமாக, மக்கள் போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது.
சாலையை சீரமைக்க தவறிய அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் பூதூர் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“டூ வீலரில் கூட போக முடியாத நிலை. சிறிதாக பொழியும் மழைக்கே சேறும், சகதியுமாக ஆகி சாலையில் நடந்து கூட செல்ல முடியாத அவலநிலை நிலவுகிறது” என்று மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இன்னொரு அவலத்தையும் மக்கள் குறிப்பிடுகிறார்கள்… அதாவது, “சுங்கக் கட்டணத்தை தவிர்க்க கனரக லாரிகள் பிரதான சாலையை தவிர்த்து விட்டு கிராமத்தின் வழியே செல்வதும் சாலை சீரழிவுக்கு காரணம்” என்கின்றனர்.
இதுபோக, அண்மைக் காலமாக அரசு பேருந்து சேவையும், ‘சாலை மோசம்’ என்று காரணம் காட்டி நிறுத்தப்பட்டு விட்டதாம்.
பள்ளி- கல்லூரி மாணவர்கள், முதியோர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு நிற்கின்றனர். சாலை சேற்றில் நாற்று நட்டு வைத்து போராடியாவது அரசாங்கத்தின் கவனத்துக்கு பிரச்சினையை கொண்டு போவோம் என்றுதான் போராட்டமே அமைந்தது. சோழவரம் போலீசார் அரசு அதிகாரிகளிடம் பேசி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்துதான் இந்தளவில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பொன்.கோ.முத்து