ரைஸ் புல்லிங் என்ற இரிடியம் பெயரால் நடக்கும் மோசடிகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. விவிஐபிகளின் ஆதரவோ பாதுகாப்போ இல்லாமல் இவ்வளவு பெரிய நெட்வொர்க் ஜித்தன்கள் இயங்க வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஒன்றே முக்கால் கோடி ரூபாய் வரை, இரிடியம் மோசடி நபர்களிடம் பணத்தை இழந்த சினிமா நடிகர் விக்னேஷ் அளித்திருக்கும் பேட்டியே அதை உறுதிப்படுத்துகிறது. “குறைந்த முதலீட்டில் பெரிய லாபத்தை ஈட்டலாம் என்றால் வணிகம் செய்யும் எல்லோருமே முன் வருவார்கள், இது பேராசையெல்லாம் இல்லை. நானும் வணிகம் செய்கிற நபர் என்பதால் நம்பினேன். இரிடியம் என்கிற ரைஸ் புல்லிங்கில் ஈடுபடும் நபர்கள் விவிஐபிகளாக கண் முன் நின்றனர். ராணுவ கர்னல் அந்தஸ்து அதிகாரி ஒருவரும் இரிடியம் வணிகத்தில் இருப்பதை பார்க்கும் போது நம்பிக்கை ஏற்பட்டது” என்கிறார் நடிகர் விக்னேஷ். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், “ஒன்றே முக்கால் கோடியை ஏமாற்றிய ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்” என்று புகார் மனு அளித்துள்ளார். நடிகர் விக்னேஷ், கூறும்போது “என்னைப் போல் ஏமாந்த பலர் இருக்கிறார்கள், ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஆசாமிகள், பல நூறுபேர் இருக்கிறார்கள், ஒருவரையும் போலீசார் விட்டுவிடக் கூடாது” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஆண்டு கோவை மாநகரில் இதே போல் ஒரு சம்பவம். அப்போதைய மாவட்ட போலீஸ் எஸ்.பி. செல்வ நாகரத்தினம், துரிதமாக செயல்பட்டு ஸ்பெஷல் டீமை முடுக்கியதில் பலர் சிக்கினர். இரிடிய மோசடி கும்பலுக்கு வைத்த பொறியில் கள்ள நோட்டுக் கும்பலும், கள்ளக் கடத்தல் ஆசாமிகளும் சிக்கினர். இரிடியத்தின் தொடர்பு, இணைப்பு சங்கிலி போன்றது. விசாரணையானது ஒரே பாய்ன்டில் நிற்பது இல்லை. அன்று, கோவை போலீஸ் எஸ்.பி. செல்வநாகரத்தினம், பிரஸ் மீட்டில் தெரிவித்ததை அப்படியே தருகிறேன். “இரிடியம் மோசடி தொடர்பாக, ராணிப்பேட்டை தினேஷ்குமார், சூர்யகுமார், திருப்பூர் ராஜ் என்ற போஜராஜன், கோவை முருகேசன், செந்தில்குமார், வெங்கடேஷ் பிரபு கைது செய்யப்பட்டனர். இவர்களில் தினேஷ்குமார் இரிடியத்தை ஆய்வு செய்யும் நிபுணர் போலவும், போஜராஜன் இடைத்தரகர் போலவும், முருகேசன் ஆதிவாசி போலவும், மற்ற நபர்கள் வாங்க – விற்க வந்தவர்கள் போலவும் நடித்துள்ளனர். இந்த கும்பல் கேரளாவின் மகரூப், அப்துல்கலாம் ஆகியோரை நூதனமாக வலையில் வீழ்த்தியுள்ளனர். பல கோடி ரூபாய் பெறுமான இரிடியக் கலசம் கைவசம் இருக்கிறது, இரிடியத்தை வாங்க ஆள் ரெடி. முன்னதாக இரிடியத்தை ஆய்வு செய்வதற்கு சில இடங்களுக்கு நேரில்தான் போய் வரவேண்டும், அதற்கு கையில் பணம் தேவைப் படுகிறது. ஆய்வு முடிந்ததுமே பல கோடிக்கு இரிடியத்தை விற்று விடலாம் என்று சொன்னதோடு, செலவுக்கு நீங்கள் கொடுக்கும் பணத்தை பத்துமடங்கு அதிகமாக திருப்பித் தருகிறோம் என்றதும் கேரள நபர்கள் ஏமாந்து 27 லட்ச ரூபாயை கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கிய மோசடி கும்பல்,99 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு கள்ளநோட்டை சில நாட்களிலேயே திருப்பிக் கொடுத்துள்ளனர். இதற்கிடையே கேரள ஆசாமிகளான மகரூப்பும் அப்துல்கலாமும் இரிடியம் தொடர்பான ஆவணங்களை ஒருநாள் கேட்க பிரச்சினை வெடித்துள்ளது. அடுத்தடுத்த உரையாடலில் கேரள ஆசாமிகள் உஷாராகி, 99 லட்ச ரூபாயை சரி பார்த்துள்ளனர். அப்போது அது கள்ளநோட்டு என்று தெரிய வர பதறிப் போயிருக்கிறார்கள். குட்டு உடைந்ததை இரிடியம் மோசடி கும்பலும் ஸ்மெல் செய்யவே அவர்கள் கேரள ஆசாமிகளை கொலை செய்ய திட்டம் வகுத்துள்ளனர். அதைப் புரிந்து கொண்ட கேரள ஆசாமிகள் போலீஸ் உதவியை நாடவே, இவ்வளவு பெரிய கும்பல் அடுத்தடுத்து சிக்கிக் கொண்டது…. இதுதான் போலீஸ் எஸ்.பி. செல்வ நாகரத்தினம் அளித்த பேட்டியின் சுருக்கம்! ஆயிரத்து ஐநூறு ரூபாய் விலையில் ஒரு பாத்திரத்தை வாங்கி அதை கருக்கி, இரிடியம் போல காட்டி மோசடி கும்பல் பலரை ஏமாற்றுவதையும் அன்றைய பேட்டியில் எஸ்.பி., செல்வ நாகரத்தினம் குறிப்பிட்டார். இன்னும் நூறு பிரஸ் மீட்டுகள், ஆயிரமாயிரம் கைது நடவடிக்கைகளை போலீஸ் எடுத்தாலும் ஏமாந்து கொண்டிருக்கும் நபர்களின் எண்ணிக்கை லட்சத்தில்தான் இருக்கிறது. இரிடியம் என்கிற ரைஸ் புல்லிங் விவகாரத்தில் நடிகர் விக்னேஷ் குறிப்பிடும் விவிஐபிகள் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. அவமானத்தாலும், பொருள், பணம், சொத்துகள் இழப்பு என்று பலர் வீதிகளில் சுற்றிக் கொண்டிருக்கக் கூடும். இன்னும் சிலர் ஆதரவற்றவர்களாக சாலையோரத்தில் கொஞ்சங் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கக்கூடும் – செத்தும் போயிருக்கலாம்… – ந.பா.சேதுராமன் – (குறிப்பு : இன்னொரு கட்டுரையில் இரிடியம் குறித்த விரிவான கட்டுரையை தருகிறேன்! )