திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஏரிகளில் சட்ட விரோத கனிமவளக் கொள்ளை நடைபெற்று வருகிறது. பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட தடபெரும் பாக்கம்,
ஆமூர், வடக்கு நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகளில் 30 முதல் 40 அடி ஆழ குழிதோண்டி தினமும் நூற்றுக் கணக்கான சரக்கு லாரிகளில் சவுடு மண்களை விற்பனைக்கும், தனியார் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கும் சட்ட விரோதமாக கொண்டு செல்வது தொடர்ந்து நடைமுறையில்
உள்ளது.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, “சாலை விரிவாக்க பணிக்காக மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடனே சவுடுமண் கொண்டு செல்லப் படுகிறது” என்கின்றனர். அப்படியே
சாலை விரிவாக்கத் திட்டம்தான் என்று வைத்துக் கொண்டாலும் கூட சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட சம்பந்தப்பட்ட நிறுவனம் (?) சவுடுமண் எடுப்பதற்காக அரசுக்கு வங்கி வழியில் பண பரிவர்த்தனையாக செலுத்திய அரசு கட்டணத் தொகை எவ்வளவு ? எந்தெந்த ஏரியில் சவுடு மண்ணை அள்ளி – வெட்டிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது, எத்தனை அடி ஆழம் வெட்டலாம், எத்தனை சதுர மீட்டர் அளவு வெட்டலாம், நாள் ஒன்றுக்கு எத்தனை லோடு ட்ரிப் அடிக்கலாம், காலக்கெடு எத்தனை நாட்கள் போன்ற கேள்விகள் வரிசை கட்டுகின்றன.
அதேபோல் ஏரி பாசன விவசாயிகள் சங்கம், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற நிர்வாகங்கள் போன்றன, கிராம சபா
கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தபின் பொதுமக்களின் ஒப்புதலை பெற்று அதற்கான தீர்மான இயற்றல்
கடிதத்தை மாவட்ட ஆட்சியருக்கும், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியதா ? சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அந்த பகுதியில் முறைப்படி ஆய்வு நடத்தி சவுடு மண் குவாரி நடத்த தடையில்லா சான்று வழங்கியதா ? சரக்கு லாரிகளில் சவுடு மண் கொண்டு செல்லும் பொழுது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முழுமையாக தார்ப்பாய் விரித்து மூடி எடுத்துச் செல்லப்படுகிறதா ?
இப்படி டஜன் கணக்கிலான கேள்விகளுக்கு அதிகாரிகளின் மொத்தமான ஒரே பதில், ”சாலை விரிவாக்க திட்டத்திற்காக இந்த
சவுடுமண் கொண்டு செல்லப்படுகிறது” என்பதுதான்…
அப்படியே இருந்தாலும் அதில் குறுக்கு வழியில் கனிம வளம் கொள்ளை போவது அதிகாரிகளுக்கு தெரியாதா ?
அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நாடகம் ஆடுகிறார்களா ?
என்று வேதனையுடன் குற்றச்சாட்டை முன்வைக்கும் பொதுமக்கள் இதே நிலை நீடித்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதோடு, பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விலை நிலங்கள் பாலைவனமாக மாறிவிடும் எனவும் எச்சரித்துள்ளனர். பொன்னேரி மட்டுமல்ல திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரின்றி தவிக்கும் நிலைக்குதான் தள்ளப் பட்டுள்ளது.
நீரின்றி அமையாது உலகு என்று தெய்வப்புலவன் வள்ளுவன் கூறியதை அரசு நினைவில் கொண்டு அனைத்து ஜீவராசிகளுக்கும் தண்ணீர் தேவை என்பதால் அவைகள் உலகில் உயிர் வாழ, நீர்நிலைகளை முறையாக தூர்வாரி பராமரித்து அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பாசன பயன்பாட்டையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
நம்பி