போலி ஆவணத்தைக் காட்டியும், ஆள் மாறாட்டம் செய்தும் நிலமோசடியில் ஈடுபடுகிறவர்கள், எல்லா காலகட்டத்திலும் நிறைவாகவே இருக்கிறார்கள். யாராவது சிறுதொழில் தொடங்க லட்ச ரூபாய் லோன் கேட்டுப் போனால் மூன்று தலைமுறை ஆவணங்களை ஸ்கேன் செய்கிற வங்கிகள்தான், (நில) அபகரிப்பு நிலங்களின் மீது வங்கிக்கடனை அள்ளி அள்ளி வழங்குகின்றன. அப்படி, அள்ளி – அள்ளி கடனைக் கொடுத்த வங்கி அதிகாரிகளை போலீசார் நெருங்கும் போது (பெரும்பாலும் அது நடப்பது இல்லை) அவர்கள், பணி ஓய்வு அதிகாரி ஆகியிருப்பார்கள். தொடரும் கண்ணாமூச்சு ஆட்டத்தின் லேட்டஸ்ட் வெர்ஷனாக ஒரு குட்டிக்கதை ! சாதா அல்லது ஸ்பெஷல் சாதா என்றளவில் இது போன்ற செய்திகளை வாசித்த கையோடு கடந்து போவதே உத்தமம் மக்களே. இனி செய்தி :
விஜயாமுரளி என்ற பெண்மணிக்கு வயது 58. 2014 முதல் கோடம்பாக்கம் ஜக்கிரியா காலனியில் இருக்கும் தந்தையின் ‘சொத்து’ வை (2160 சதுர அடி மனை) வாரிசுரிமை உயில் மற்றும் கோர்ட் உத்தரவுப்படி அனுபவித்து வருகிறார். இது ஒரு பார்ட். அடுத்த பார்ட் இது : கடந்த ஆண்டு (2021) ஒரு சம்பவம். விஜயாமுரளியின் தாத்தா, சி.எம். பாலசுப்பிரமணியம் பெற்றெடுத்த மகளாக ராஜேஸ்வரி என்ற ஒரு கேரக்டர் உருவாக்கப் பட்டுள்ளது. போலியாக உருவான அந்த கேரக்டருக்கும் அதே போல போலியாக ஒரு சகோதரி உருவாகியுள்ளார் – இந்த கேரக்டர் பெயர் ராதா. போலி ராஜேஸ்வரியின் சகோதரியாக உருவாக்கப்பட்ட போலியான கேரக்டர் ராதாவுக்கு, சீனியர் போலி கேரக்டரான ராஜேஸ்வரி செட்டில்மெண்ட் செய்த மாதிரி போலி ஆவணங்கள் முதற்கட்டமாக உருவாக்கப் படுகிறது. போலி ஆவணங்களை உருவாக்க போலியான நபர்கள் தேவைப்பட அவர்களையும் உள்ளே இறக்கி நிலத்தை பதிவு செய்து அபகரிக்கும் திட்டமும் உருவாகியிருக்கிறது… மொத்த அயோக்கியத்தனமும் சிறப்பாய் முடிந்த நிலையில் ஒரிஜினல் நில உரிமையாளர் விஜயாமுரளி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் கொடுத்த புகார் வேகம் பிடிக்கத் தொடங்கியது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், விவகாரத்தை விசாரிக்க எடுத்துக் கொண்டனர். புகார்தாரர் விஜயாமுரளியின் இடத்தில் அவருடைய தாத்தா சி.எம். பாலசுப்பிரமணியம் மகள் என கூறப்பட்ட ராஜேஸ்வரி என்ற கதாபாத்திரம், தன்னுடைய சகோதரி ராதாவிற்கு செட்டில்மெண்ட் செய்தது போலவும், பின்னர் ராதா 2021ம் வருடம், தன்னுடைய கணவர் பிரபுவுக்கு செட்டில்மெண்ட் செய்தது போலவும், அதன் பின்னர், கணவர் கதாபாத்திரமான பிரபு, அவருடைய ஃபவர் ஏஜெண்ட் (அதிகார முகவர்) குமார் என்பவர் மூலம், சமீர் கோட்டக்கல் உமர் என்பவருக்கு ரூ.2 கோடிக்கு நிலத்தை பக்குவமாக விற்றது போலவும் மொத்தமும் சித்தரிக்கப் பட்டது. சமீர் கோட்டக்கல் உமர் என்ற கதாபாத்திரம் இதன் பின்னர் வங்கியில் இரண்டு கோடி ரூபாய்க்கு கடன் பெற்று, விஜயா முரளியின் சொத்தை வாங்கியுள்ளார். வங்கியில் கடனைப் பெற, ஒரிஜினல் ஓனரான விஜயாமுரளியின் சொத்து போலவே போலி ஆவணங்களை உருவாக்கி வங்கிக் கடன் பெற்றுள்ளனர். வங்கியும், வங்கி அதிகாரிகளும் இதில் ஏமாந்தார்களா என்பது தெரியவில்லை. வங்கிகளில் ஒரிஜினல் ஆவணங்களைக் கொடுத்தாலே கடனோ, லோனா, அவசரத்துக்கு கிடைப்பது இல்லை என்பதால் இது குறித்து நாம் சொல்ல ஒன்றுமில்லை. நாம் சொல்வதென்றால் போலி ஆவணத்தின் மீது பணம் கொடுத்த அதிகாரிகளையும் விசாரித்தே ஆகவேண்டும், அதற்கு வாய்ப்பு உள்ளதா தெரியவில்லை. நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு உதவி கமிஷனர் அனந்தராமன, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, ஆகியோரை உள்ளடக்கிய தனிப் படை போலீசார், விசாரணையில் இறங்கினர். பெரும்பாக்கம் சமீர் கோட்டக்கல், செம்மஞ்சேரி ரமேஷ்பாபு, பெரும்பாக்கம் நௌசத், மணலி சிந்துபரமசிவம், மாத்தூர் யாசின்செரிப், மணலி மல்லிகா ஆகிய 6 நபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆறுபேரும் நீதிமன்ற நேர் நிறுத்தலுக்குப் பின் சிறைக்கு அனுப்பப் பட்டனர். அடுத்தடுத்து இதே போல் போலி ஆவணங்களைக் கொடுத்து நிலமோசடி புகார்கள் போலீசுக்கு வரும். கூடவே, “போலியான ஆவணங்களைக் கொடுத்து நிலத்தின் மீது கேட்ட பணத்தைக் கொடுத்து ஏமாந்தோம், ஆகவே விசாரித்து நடவடிக்கை எடுங்க ஆபீசர்” என்று ஏதாவது ஒரு வங்கித் தரப்பில் புகாரும் சேர்ந்து வரும். அதை விசாரிக்க அரசாங்கப் பணத்தில் பெட்ரோல், டீசல் போட்டுக்கொண்டு போலீஸ் ஜீப்பும், பத்து தனிப்படையோடு சேர்த்து அதிகாரிகளும் மாதக் கணக்கில் அரசாங்க சம்பளத்தோடு வேலை பார்க்க வேண்டும். மோசடி பேர்வழிகள் சிக்கலான. ஆசாமிகள் என்றால் தனிப்படை போலீசாருக்கு மோட்டார் சைக்கிள்களைக் கொடுத்து தெருத்தெருவாக அவர்களைத் தேடிப்பிடிக்க அனுப்பி வைக்க வேண்டும், அதற்கும் எரிபொருள் அரசாங்கப் பணத்தில்… இந்த செட்டப்பை மொத்தமாக உடைத்துக் குப்பையில் போட வேண்டுமென்றால் முதலில் வங்கிகளை நோக்கித்தான் போலீசாரின் புலன்விசாரணை அமைய வேண்டும். காலங்காலமாக பணி ஓய்வு வங்கி அதிகாரிகளை ட்ரேஸ் செய்து பிடிப்பது ஒழிந்து பணியில் (சர்வீசில்) இருக்கும் போதே அவர்களை பிடித்து கைது செய்வதோடு, அவர்களை பொதுவெளியில் அம்பலப்படுத்த வேண்டும்…
-ந.பா.சேதுராமன்