கலைஞர் போட்ட உத்தரவுக்கு வயது 23! கிடப்பில் காமராஜர் கல்வெட்டு…

பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் இடித்துத் தள்ளப்பட்ட காமராஜர் கல்வெட்டை மீண்டும் நிறுவுமாறு அன்றைய முதலமைச்சர் கலைஞர் போட்ட உத்தரவு, ஆண்டுகள் 23 ஆண்டு ஆகியும் நிறைவேற்றாத அதிகாரிகள் இன்னமும் தமிழ்நாட்டில் சேவை (!) புரிவதுதான் வியப்பு.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த 13.6.1961-ல் அப்போதைய நகர பஞ்சாயத்து தலைவர் எம். ரத்தினவேல் தலைமை தாங்க, நிர்வாக அதிகாரி ஆர். கருணாநிதி முன்னிலையில் நடைபெற்றது. அன்றைய சென்னை மாகாண முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் கலந்து கொண்டு, புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். அப்போது காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட விழா கல்வெட்டும் நிறுவப்பட்டது. இந்த நிலையில் கட்சிப் பணியில் முழுமையாக ஈடுபட, காமராஜர் தனது முதலமைச்சர் பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக அவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் சென்னை மாகாண முதல்வராக, 1962-ஆம் ஆண்டு பக்தவத்சலம் பதவி ஏற்றார். தொடர்ந்து, 1967 – வரை முதல்வராக இருந்தார். அப்போது நடைபெற்ற பொதுத் தேர்தலில், திமுக கூட்டணி வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா தலைமையில் சென்னை மாகாணத்தில் ஆட்சி அமைந்தது. அறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார். தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பொன்னேரி புதிய பேருந்து நிலைய கட்டிட கட்டுமான பணிகள், மீண்டும் கடந்த 2000- ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவிற்காக ஏற்கனவே அங்கு இருந்த பெருந்தலைவர் காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மற்றும் காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிக்கம்பம் பிம்பத்துடன் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதனால் கொதிப்படைந்த காங்கிரஸ் கட்சியினர் அப்போதைய கட்சியின் மாவட்ட தலைவர் டி. எல். சதா சிவலிங்கம் தலைமையில், அகற்றப்பட்ட காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டையும், கட்சி கொடிக்கம்பத்தையும், மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று அதிமுக, கம்யூனிஸ்ட்களும் போராட்டத்தில் குதித்தனர். அதன்பின் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர அப்போதைய பொன்னேரி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட சமரச கூட்டத்தில், அகற்றப்பட்ட இடத்திலேயே காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நிறுவப்படும் என, அதிகாரிகள் கடிதம் வாயிலாக ஒப்புதல் அளித்தனர்.

இதனை ஏற்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர். விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டி.எல். சதா சிவலிங்கம் விடுத்த அறிக்கை நாளிதழ்களில் வெளியானது. அதனை கண்ட அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி, அகற்றப்பட்ட காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை மீண்டும் அதே இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, 23 ஆண்டுகள் ஆகியும், மாவட்ட அதிகாரிகள் அகற்றப்பட்ட கல்வெட்டை மீண்டும் இதே இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்காமல் கலைஞரின் உத்தரவை கிடப்பில் போட்டனர். இந்த நிலையில் தந்தையின் உத்தரவை அவரது தனயனான தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று, பெருந்தலைவரின் பிறந்த நாளான ஜூலை 15, ஆம் தேதிக்குள் பொன்னேரி பேருந்து நிலையத்தில் அகற்றப்பட்ட அவரது பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை மீண்டும் நிறுவ; தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, பெருந்தலைவர் காமராஜரின் மீது விசுவாசம் உள்ள அபிமானிகளின் எதிர்பார்ப்பு… செய்வார்களா ?

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *