திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த புழுதிவாக்கம்- சதுப்பு நிலப் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ‘அலையாத்தி காடுகள் மீட்டுருவாக்குதல்’ திட்டத்தின் கீழ் அலையாத்தி மரக்கன்றுகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் நடவு செய்து தொடங்கி வைத்தனர்.
அமைச்சர் மதிவேந்தனிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். “ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் எண்ணூர் சதுப்புநில பகுதியில் அலையாத்தி காடுகள் உருவாக்கும் முயற்சியாக மரகன்றுகள் நடவுசெய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள காடுகள் அழிந்து வருவதால்தான் தற்போது மீண்டும் காடுகளை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் 22%உள்ள வனப்பரப்பை 33%உயர்த்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காப்பு காடு திட்டத்தில், தைலமரங்கள் மட்டுமே நடவு செய்வது இல்லை, கால சூழ்நிலைக்கு ஏற்ப மர வகைகள் தேர்வு செய்யப்படுகிறது. இடங்களுக்கு ஏற்ப மரங்களை நட்டு தமிழ்நாட்டை பசுமையாக்குவோம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தாழ்வாக உள்ள மின் கம்பிகள், சாய்ந்து கிடந்த மின் கம்பிகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளது. வனத்துறையும், மின்துறையும் இணைந்து, இனிமேலும் யானைகள் மின்சாரம் தாக்கி பலியாகாத வகையில் நடவடிக்கை எடுத்து முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. யானைகளுக்கு வனப் பகுதியில் குடிநீர்த்தொட்டிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. குறைகள் விரைவில் சரி செய்யப்படும். தடை செய்யப்பட்ட பூச்சி வகைகளை கடத்துவதை தடுக்க அனைத்துவித நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். வனப்பகுதியில் நடைபெறும் குற்றங்களை தடுக்கவும், கடல் சார்ந்த குற்றங்களை தடுக்கவும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். தரிசு நிலங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து வனப்பரப்பை அதிகரிக்க பணிகள் நடந்து வருகிறது” என தெரிவித்தார்.
இதனிடையே தொடர்ந்து அடுத்தடுத்து வனத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் உடனிருந்த திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் காந்தி, “பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே தமது துறையை குறித்து தெளிவாக அனைத்து பதில்களையும் அமைச்சர் கூறிய நிலையில் 2. ஆண்டுகளாக தொடர்ந்து பணிகள் மேற்கொண்டு வரும் எங்களையே துருவி துருவி கேள்வி கேட்கிறீர்களே, கடந்த 10ஆண்டுகளாக எந்த பணியையும் செய்யாதவர்களிடம் கேள்வி கேட்பீர்களா?” என கூறி செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு புறப்பட்டனர்.
பொன்.கோ.முத்து