தெலங்கானாவில் தரைதளத்திலிருந்த ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ நான்கு மாடிகளுக்கும் பரவியதில், தீயில் கருகி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ‘நம்பள்ளி’ யில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நான்கு அடுக்குகளை கொண்ட இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் ரசாயன கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை கீழ்த்தள ரசாயனகிடங்கில் பற்றிய தீ, மேல்தளம் வரை பரவியது. இந்த விபத்தால் குடியிருப்பில் வசிப்பவர்களில் பலர் அலறி கீழே இறங்கி வர முற்பட்டனர். காற்றின் வேகத்தால் நாற்புறமும் தீ பரவியதால் அதிலிருந்து வெளியேற முடியாமல் அலறி துடித்தனர். தகவல் அறிந்து முதற்கட்டமாக ஐந்து வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.
கீழ்தளத்தில் கிடங்கில் இருந்த ரசாயனக் கலன்கள் வெடித்து சிதறியதால் கட்டிடத்திற்குள்ளேயும் வெளியே சாலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்களில் தீப்பற்றி அவையும் எரியத் தொடங்கியது. கட்டிடத்தின் அருகே யாரும் செல்ல முடியாத நிலையிலும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணிக்காக போராடினர்.
இந்நிலையில் ராட்சத ஏணி மூலம் தீஅவிப் மற்றும் மீட்புப் படை வீரர்கள் கட்டிடத்தின் மேலேசென்று கட்டிடத்தில் சிக்கிக்கொண்ட குடியிருப்பு வாசிகளை ஒவ்வொருவராக மீட்டு வெளியில் கொண்டு வருகிற நடவடிக்கை மேற்கொண்டனர். இருந்தபோதும் இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் 25 பேர் மீட்கப் பட்டனர். அவர்களில் மூன்றுபேர் அடுத்தடுத்து இறக்கவே இறப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
மீட்கப்பட்ட பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடியிருப்பு பகுதியில் விதிகளுக்கு மாறாக ரசாயன கிடங்கு செயல்பட்டு வந்தது, தெரிய வந்துள்ளது. மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ரசாயன கிடங்கு அமைக்க அனுமதி வழங்கப்பட்டது எந்த விதிமுறையில் சாத்தியப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பொன்.கோ.முத்து