திருந்தி வாழ்கிறோம் என்று உறுதியளித்த சமூக குற்றவாளிகள், வார்த்தை மீறியதால் அவர்களை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவதனம் உத்தரவிட்டார்.
சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்ட துணை போலீஸ் கமிஷனர் இ.சுந்தரவதனம். ‘இதுவரையில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை வேறு மாதிரி, இப்போது திருந்தி வாழப் பார்க்கிறோம்’ என்று சரண்டர் ஆகும் சமூகக் குற்றவாளிகளை போலீஸ் உயர் அதிகாரிகள் சில நிபந்தனைகளுடன் திருந்தி வாழ வழி சொல்வார்கள். குறைந்த பட்சம் ஓராண்டு காலத்துக்கு சமூகக் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனைகளில் ஒன்று. வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்துக்கு துணை கமிஷனராக இ. சுந்தரவதனம் பொறுப்பேற்றது முதலே, திருந்தி வாழ நினைக்கிற சமூகக் குற்றவாளிகள், திருந்தி வாழ விண்ணப்பித்தால் அதை உடனடியாக பரிசீலித்து அவர்களுக்கு வாய்ப்பளித்து வந்தார். அந்த வகையில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ள சென்னை கொருக்குப் பேட்டை கௌதம், மார்ச் 2-ஆம் தேதி, உரிய சாட்சிகளுடன் துணை கமிஷனர் முன்பு ஆஜரானார். ‘திருந்தி வாழப் போகிறேன், ஓராண்டு காலத்திற்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபட மாட்டேன்’ என நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். அதேபோல் ஐந்து குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள கொருக்குப் பேட்டை கணேஷ் (எ) பப்லு மார்ச் 12-ஆம் தேதி சாட்சிகளுடன் வந்து திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு சரணடைந்தார். மார்ச் 16- ஆம் தேதி, 16 குற்ற வழக்குகளில் தொடர்புள்ள பழைய வண்ணாரப்பேட்டை பாலாஜியும் திருந்தி வாழ விரும்பும் மனுவோடு டெபுடி போலீஸ் கமிஷனர் இ. சுந்தரவதனம் அலுவலகம் வந்து வாய்ப்பு கோரினார். திருந்தி வாழ வாய்ப்பு கோரி மனு கொடுக்கும் யாராவது திருந்தி விட்டால் போலீசுக்கும் சமூக பாதுகாப்புக்கும் அது நல்லதுதானே என்ற எண்ணத்தில் போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவதனமும் அளித்துப் பார்த்தார் ஒரு வாய்ப்பு. இந்நிலையில்தான் கடந்த 21-ஆம் (21.05.2022) தேதி, கௌதம், கணேஷ் (எ) பப்லு மற்றும் பாலாஜி ஆகியோர் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் போலீசில் சிக்கிக் கொண்டனர். கூட்டாளிகள் சியான் முருகன், டில்லிபாபு மற்றும் சிலருடன் சேர்ந்து ஆயுதங்களுடன் கொருக்குப் பேட்டை பகுதியில் உள்ள கடையில் திருட காத்திருந்த போது, கொருக்குப்பேட்டை போலீஸ் டீம் அவர்களை வளைத்துப் பிடித்தது.
கௌதம், கணேஷ் (எ) பப்லு மற்றும் பாலாஜி ஆகியோர் ‘ஓராண்டு காலத்துக்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபட மாட்டோம்’ என எழுதிக் கொடுத்த ‘நன்னடத்தை பிணை ஆவண மீறல்’ குற்றச் செயலுக்காகவும் கைது செய்யப் பட்டனர். செயல்முறை நடுவரான துணை கமிஷனர் இ.சுந்தரவதனம், பிரிவு 110- ன் கீழ் பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள நாட்கள் வரை பிடிபட்டவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்டார். அதன்படி கௌதம் 276 நாட்களும், கணேஷ் (எ) பப்லு 286 நாட்களும், பாலாஜி 290 நாட்களும் பிணையில் வர முடியாதபடி மே- 30ஆம் தேதியன்று சிறையில் அடைக்கப்பட்டனர். பிடிபட்ட மற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் நேர் நிறுத்தப் பட்டனர். ந.பா.சேதுராமன்
சென்னை போலீஸ் கமிஷனருடன் துணை கமிஷனர் சுந்தரவதனம் (கோப்பு புகைப்படம்)