உயர்ந்த உள்ளம் ! உயரமான மனிதர் !
டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா…


சென்னை மெட்ரோவை, ஒரு காலத்தில் 30 நாள் கமிஷனர் பதவிப்பொறுப்பில் கலக்கியவர்தான், சஞ்சய் அரோரா.
சென்னை போலீஸ் கமிஷனரேட்டின் வரலாற்றில் போலீஸ் கமிஷனர் உடல்நலக்குறைவினாலோ வெளிநாட்டுப் பயணம், பயிற்சி என்று செல்லும் போதெல்லாம் அந்த அந்தஸ்தில் உள்ள ஓர் உயரதிகாரியை இன்சார்ஜ் பதவியில் அமர்த்த ஆணையிடும் அரசு. சிலசமயம் அடிஷனல் கமிஷனர் என்ற ஒரு பதவி உயிர் பெற்றிருந்தால் அவரிடம் கமிஷனரேட்டின் பொறுப்பு ஒப்படைக்கப்படும். காரணம் அடிஷனல் கமிஷ்னர் பதவி என்பது அரசின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றாற்போல் அடிக்கடி ஒழித்துக் கட்டப்படும். அடுத்த ஆட்சி மலரும்போது அதிரடியில் உயிர் பெறும்.


காவல்துறையின் பரிணாம வளர்ச்சியில் பணி சுமை அதிகரிப்பு மற்றும் உயரதிகாரிகளின் எண்ணிக்கை பெருக்கம் போன்றவற்றால் புதுப்புது பதவிகளை உருவாக்கி பிரஷர் கொடுக்கும் பராக்கிரமம் தெரியாத ஐபிஎஸ் அதிகாரிகளை அதில் அமர்த்திவிடும் அரசு.அப்படித்தான் தலைமையிட, துணை கமிஷனர் என்றிருந்த பதவியை அடுத்து ஐ.ஜி., அந்தஸ்தில் ஹெட்குவாட்டர்ஸ்க்கு அடிஷனல் கமிஷனர் என்ற உயரதிகாரியை நியமித்தது அரசு. சுந்தரமூர்த்தி, ரவி, பிரமோத்குமார் போன்றவர்கள் இருந்தவரை மகா டம்மி போஸ்ட் என்றே முணுமுணுக்கப்பட்டது, அனைவராலும். இன்று தலைமையிட அடிஷனல் கமிஷனர் சட்டம் ஒழுங்கில் உள்ளவர்களை காட்டிலும் படு சுறுசுறுப்பாக இருக்கிறார்.

துப்பாக்கி உரிமம், குவாட்டர்ஸ் அலாட்மென்ட் பார் லைசென்ஸ், பெட்ரோல் பங்க் லைசென்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட உரிமங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகார வரத்தையும் கைவசம் வைத்திருக்கிறார் அடிஷனல் கமிஷனர்.


சுயநலமிக்க சில கமிஷனர்கள், சமயத்தில் மேற்கண்ட அதிகார வரத்தில் சிலவற்றை(யும்) அதிரடியில் அவர்களிடமிருந்து பிடுங்கி தன்வசம் வைத்துக் கொள்வார்கள். ரவியாவது பரவாயில்லை. பழகிய நிருபர்கள் அடிக்கடி போய் பார்த்து பேசுவதால் ஆதங்கம் வெளிப்படாது அவரிடம். ஆனால் பிரமோத் குமார் இங்கு அடிஷனல் கமிஷனராக வந்தமர்ந்தது கிட்டத்தட்ட சிறைவாசத்துக்கு இணையானது. பேச்சுத் துணைக்கும் ஒரு ஆள் கிடையாது. விட்டால் போதும் என்று ஓடிவிடத் தயாராக இருந்தார். நல்வாய்ப்பு எப்படி வேலை செய்தது பாருங்கள். கமிஷனர் உள்பட பல உயரதிகாரிகள் பயிற்சி என்று உல்லாச பயணம் கிளம்ப ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் தலைநகரில் மாற்று மனிதர் இல்லாத காரணத்தால், சீனியர் ஐ.ஜி.. என்ற நிலையில் சஞ்சய் அரோராவிற்கு அடித்தது சான்ஸ்.


ஆயுதப்படை ஐ.ஜி.யாக இருந்த சஞ்சய்க்கு தலைமையிடம் மற்றும் குற்றம் என்று கூடுதல் பொறுப்பையும் கொடுத்து அடிஷனல் கமிஷ்னராக பதவியில் அமர்த்தியது அரசு. பணியில் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் கொண்ட காவல்துறையில் அரிதாக அவதாரமெடுக்கும் ஐ.எஸ்.ஓ. தரவரிசை ஐ.பி.எஸ். அதிகாரிகளில் தலைசிறந்தவர் சஞ்சய். உண்மை, உழைப்பு, உயர்வு போன்ற உயர் குணங்களுக்கு உதாரணமாக திகழ்பவர் இந்த உயர்ந்த மனிதர். தென் மாவட்டங்களில் தனி ஆவர்த்தனம் செய்தவர். முகமூடி அணியாத மிகச்சிறந்த காவல்துறை உயரதிகாரி. அகங்காரம், ஆணவம் போன்ற அற்ப குணங்களின் தாக்கத்தை அறவே காணமுடியாது சஞ்சயிடம். பொதுவாக இன்சார்ஜ் பதவியில் அமரும் எந்த கமிஷனரும் பணியில் அத்தனை ஈடுபாடு காட்டமாட்டார்கள். மேலோட்டமாக பட்டும், படாமல் இருந்து பதவியை பத்திரப்படுத்திக் கொள்வதில்தான் குறியாக இருப்பார்கள். ஆனால் தலைசிறந்த இந்த அதிகாரி 30 நாட்களில் தலைநகரில் தனி ஆவர்த்தனம் செய்திருக்கிறார்.


கமிஷனர் பயிற்சியின்போது சென்ற 30 நாட்களில் சென்னையில் குற்ற வழக்குகள் கோர தாண்டவம் ஆடியது. தாக்குப் பிடிப்பாரா சஞ்சய் என்று தாறுமாறாக விமர்சனங்கள் எழுந்தது. ஆர்.கே.நகரில் கள்ளக்காதல் தொடர்பாக ஆசிரியை கொலை, நகைகள் கொள்ளை, அரும்பாக்கத்தில் மீனாகுமாரி என்ற பெண் கொலை, நகைகள் கொள்ளை, கள்ளக்காதல் வெறியால் குழந்தை கடத்தி கொலை, பூவரசியால் ஏற்பட்ட பூகம்பம், அதே கள்ளக்காதல் தொடர்பால் மின்வாரிய ஊழியர் கடத்தி கொலை, திருவள்ளூரில் பிணம் எரிப்பு, பிரபல ஜவுளி ஜாம்பவான் போத்தீஸ் பறிகொடுத்த 81 லட்சம் ரூபாய் டெக்காய்ட்டி, ஆபரேஷன் ஹாம்லா என்ற தீவிரவாத தடுப்பு ஒத்திகையின்போது குற்றவாளிகள் சவால் விட்டு அடித்து சென்ற 21 லட்சம் ராபரி என்று கொடுங்குற்ற வழக்குகள் கோரத்தாண்டவம் ஆடியது தலைநகரில்.


ஜி.சி.ஆர். (ஜெனரல் க்ரைம் ரெக்கார்டு) என்றாலே ஜன்னி கண்டுவிடும் சில உயரதிகாரிகளுக்கு. பத்திரிகைகாரர்களுக்கு பதில் சொல்லி மாளாது என்று செல்போன்களையே ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுவார்கள் சிலர். ஆனால் போலீசில் சேலஞ்ச் என்பது சில அதிகாரிகளின் ரத்தத்திலேயே ஊறிப்போயிருக்கும். அந்த பாரம்பரியத்தின் பிரதிபலிப்புதான் சஞ்சய் அரோரா. முப்பதே நாட்களுக்குள் தலைநகரின் அத்தனை கொடுங்குற்ற வழக்குகளையும் டிடெக்ட் செய்து, அக்யூஸ்டுகளையும் அள்ளிக் கொண்டு வந்து, மாநகர மக்களை மலைக்கச் செய்து விட்டார், சிட்டி எக்ஸ்பீரியன்ஸ் சிறிதும் இல்லாத இந்த சீனியர் அதிகாரி.

கீழுள்ளவர்களை வேலை வாங்கிய விதம், இவரது பெர்ஃபார்மன்ஸ், பழுத்த அனுவம் வாய்ந்த பல உயரதிகாரிகளையே அண்ணாந்து பார்க்கச் செய்திருக்கிறது. Men Management என்பதில் ( காவலர் நலன்) கை தேர்ந்த அதிகாரி சஞ்சய் அரோரா. இரவு பகல் பாராமல் டிடெக்சன் ஒன்றையே குறியாய் கொண்டு கடுமையாக உழைத்த காவலர்களையும், கீழுள்ள அதிகாரிகளையும் நேரடியாக சந்தித்து உற்சாகப் படுத்தியுள்ளார். பிரஸ் மீட்டிலும் பகிரங்கமாக அவர்களது பெயர்களைக் குறிப்பிட்டு அறிமுகப்படுத்திய இவரது அருங்குணம் எல்லா ஐ.பி.எஸ். அதிகாரிகளிடமும் இருக்காது. ரெகுலர் கமிஷனர் ராஜேந்திரன் பயிற்சிக்கு புறப்பட்டு செல்லும்போது, சிட்டியை சஞ்சய் அரோராவிடம் எப்படி ஒப்படைத்து சென்றாரோ, அப்படியே திரும்பி வந்து பொறுப்பை மீண்டும் ஏற்றபோதும் சிட்டிக்கு ஒரு சிறிய சேதாரமும் இல்லாமல் திருப்பிக் கொடுத்திருக்கிறார் இந்த 30 நாட்கள் கமிஷனர். Attitude determine Altitude என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த உயர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி.


அதேபோல், ஒரு தலைமுறைக்கு முன்பு, தீவிரவாத தடுப்பு ஒத்திகையின்போது, நிருபர்கள் மொத்த பேரும் முகம் சுளிக்கும் விதம் நடந்து கொண்டார் கமிஷனர் ராஜேந்திரன். ஆபரேஷன் ஹாம்லா என்று சஞ்சய் அரோராவின் தலைமையில் நடந்த தீவிரவாத தடுப்பு ஒத்திகையின்போது, கமிஷனரேட்டின் என்ட்ரியில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது நிருபர்களுக்கு. எந்த கெடுபிடியும், நெருக்கடியும் தரப்படவில்லை. கமிஷனரேட்டுக்குள் நுழையும் போலீஸ் வாகனங்களை கூட பக்காவாக போலீசார் சோதனையிட்ட நேரத்திலும், பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு, உபத்திரம் செய்யாமல் உள்ளே அனுப்பி வைக்க பி.ஆர்.ஓ. அலுவலக போலீஸ்காரர் ஒருவரை என்ட்ரியிலேயே போஸ்ட்டிங் செய்திருந்தார் சஞ்சய். அவரும் தன் பங்கிற்கு வரும் நிருபர்களை எல்லாம் வாங்க சார் வாங்க சார் என்று வரவேற்ற விதம், இது கமிஷனரேட்டா இல்லை கல்யாண வீடா என்று கலகலக்க வைத்தது நிருபர்களை. எந்த சர்ச்சைக்குள்ளும் சிக்காமல் இருக்கும் சூத்திரம் தெரிந்தவர் இந்த 30 நாள் கமிஷனர். இவர் ரெகுலர் கமிஷனராக இங்கு அடியெடுத்து வைக்கும் அந்த இனிய நாளை எதிர்நோக்கி ஏக்கத்தோடு காத்திருந்தார்கள் பொதுமக்களும் நிருபர்களும். அது கனவாகி போனது அரசியல் அழுத்தத்தால். தலைநகரில் சஞ்சய் அரோரா, 12 வருடங்களுக்கு முன்பு நடத்தி காட்டிய சாகசம் இது. இவரது திறமைகளை தக்க வைத்துக் கொள்ளும் ஆளுமையில்லை அன்றைய தி.மு.க. அரசிடம். பந்தாவான பதவிக்காக மேலிடத்திடம் மண்டியிடாத மாமனிதன் சஞ்சய். காவல்துறையில் அரசியல் அத்துமீறலை அறவே விரும்பாத வணங்காமுடி! எனவேதான் விட்டால் போதுமென்று விருட்டென்று பறந்துவிட்டார் டெபுடேஷனில்.


தமிழகத்தின் திசையை நோக்கி, 10 வருடங்களாக தலைவைத்தும் படுத்ததில்லை சஞ்ஜய். தமிழகத்தின் தற்போதைய தலைமை டிஜிபியான சைலேந்திர பாபு அடுத்த வருடம் அரையாண்டில் பணிநீட்டிப்பை நிறைவு செய்யும்போது, அடுத்த வரிசை (1988 பேட்ச்) டி.ஜி.பி.க்களில் முன்னிலையில் இருப்பவர் சஞ்சய். இவரது பேட்ச் சக அதிகாரிகளான சுனில்குமார் கடந்த வருடமே ஓய்வு பெற்றுவிட்டார். அடுத்தவர் சுனில்குமார் சிங்கும், இவ்வருட இறுதியில் போலீசிடமிருந்து பிரியாவிடை பெற்று விடுவார். தமிழகத்தின் தலைமை DGP பதவிக்கு தேவையான அத்தனை தகுதியும் இவருக்கு மட்டுமே இருக்கிறது. தற்போது, இந்திய தலைநகரின் தானை தலைவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சஞ்சய். இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் எல்லாம் காவல்துறை அந்தந்த மாநில முதல்வர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். டெல்லி மாநில காவல்துறை மட்டும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில்தான் இருக்கும். டெல்லி கமிஷனரேட்டின் வரலாற்றிலேயே, ஒரு தமிழக கேடர் IPS அதிகாரியை, டெல்லி டெரிடரியின் (TERITORY) தலைமை பொறுப்பில் அமர்த்தியிருப்பது, இதுவே முதல் முறை. எஞ்சியிருக்கும் மூன்று வருடங்களையும் டெல்லி கமிஷனராகவே முழுமையாக கழித்து விடுவார் சஞ்சய் அரோரா. இவரது lதிறமைகளை திரையிட்டு மறைத்தது தமிழகம். தக்க வைத்துக் கொண்டது தலைநகர் டெல்லி !


கட்டுரையாளர் : சீனியர் க்ரைம் ஜர்னலிஸ்ட் இந்திரகாந்த்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *