குடியிருப்பு வீடுகளில் நுழையும் மான் – குரங்குகள்…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட தமிழக எல்லைப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை படர்ந்து விரிந்து காணப்பட்ட வனப்பகுதி. சிப்காட் தொழில் பூங்கா மற்றும் சாலை விரிவாக்க பணிகள் போன்றவற்றின் காரணமாக படிப்படியாக அழிக்கப்பட்டு அதன் நிலப்பரப்பு சுருங்கிவிட்டது.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக் கழிவுகளாலும், வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களின் இரைச்சலாலும், வனவிலங்குகள் வனப்பகுதியில் வசிக்க முடியாத நிலை ஒரு புறம் இருக்க மற்றொருபுறம், அவைகளின் வாழ்வாதாரமாக இருந்த நீர்நிலைகள், அவைகளுக்கு உணவு வழங்கி வந்த மரங்கள், தாவரங்களும் தற்போது வனப்பகுதியில் இல்லாததால் மான், மற்றும் குரங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடிநீருக்காகவும், உணவுக்காகவும் நகர்ப்புறங்களை நோக்கி வரத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே பலமுறை சாலையை கடக்கும் போதும், தெரு நாய்களிடம் சிக்கியும் ஏராளமான புள்ளி மான்கள் உயிரிழந்த நிகழ்வுகளும் உள்ளன. இதேபோன்று குரங்குகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டும், கட்டிடங்கள் மீது ஏறும்போது மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கியும் உயிரிழந்தும் வருகின்றன.

குரங்குகளை கண்டதும் வீதிகளில் திரியும் நாய்கள் அவைகளை விரட்டிச் செல்லும் பொழுது குரங்குகள் சிதறி ஓடும் போது எதிரே வரும் பொதுமக்கள் மீது அவைகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்துள்ளது…

குறிப்பாக தற்போது பொன்னேரி பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் கூட்டம் கூட்டமாக குரங்குகள் படை எடுத்து உணவுக்காக வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன.
அவைகளை விரட்ட வீட்டில் இருப்பவர்கள் முயற்சிக்கும் பொழுது குரங்குகள் எதிர் தாக்குதலும் நடத்துகின்றன, வனவிலங்குகள் அதிக அளவில் நகர்ப்புறங்களை நோக்கி வருவதற்கு காரணம் வனப்பகுதியின் நிலப்பரப்பு குறைந்தது மட்டுமல்லாது அங்கு அவைகளுக்கு தேவையான உணவுகளும் இல்லை என்பது நிதர்சனம். மேலும் வனத்துறையினர் காப்புக்காடு என்ற பெயரில் வன விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தேவையான உணவுகளை வழங்கக் கூடிய மரங்களை வளர்க்காமல் குறுகிய காலத்தில் வளரும் தைல மரம் போன்ற ரகங்களையே அதிகளவில் வளர்த்து வருகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் கிடைக்கலாமே தவிர, வன விலங்குகளுக்கும் -காற்றை சுவாசிக்கும் எந்த உயிரினத்திற்கும் ஒரு பலனும் இல்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சான்றோர் வாக்கை தமிழக அரசும் நடுவண் அரசும் வெறும் வார்த்தையாக மட்டும் கருதாமல் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்க அதிக அளவில் காப்புக்காடுகளில் அவைகளின் பசியை ஆற்றும் உணவு தரக்கூடிய மரங்கள் தாவரங்களை வளர்க்க வேண்டும் என்பதே வனவிலங்கு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு,

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *