வாடகைக் கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தக் கோரி நிலக்கரி சுமைலாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நிலக்கரி கொண்டு செல்லும் பணி மொத்தமாக முடங்கியுள்ளது. மின் உற்பத்தி பெரும் சரிவை ஏற்படுத்தும் அபாயம் இதனால் ஏற்பட்டுள்ளது.
சென்னை எண்ணூரில் உள்ள தனியார் நிலக்கரி முனையம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள நிலக்கரி முனையங்களிலிருந்து, அனல் மின் நிலையங்கள், தனியார் இரும்பு உருக்கு ஆலை, ஆரோ பிளாக் கற்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு நிலக்கரி அவசியத் தேவையாகிறது. மேற்கண்ட பணிகளுக்கு நிலக்கரிகளை கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை, சுங்க வரி உயர்வு, வாகன உதிரி பாகங்கள் விலையேற்றங்களால் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை தொடர்ந்து இயக்க முடியாத நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். நிலக்கரி கொண்டு செல்லும் லாரிகளுக்கான வாடகையை 30% உயர்த்தி தர வேண்டும் என்று இதனால் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். சம்பந்தப்பட்ட நிலக்கரி முனைய நிர்வாகங்கள், லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்காததால் ஏற்கனவே அறிவித்தபடி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அனல் மின் நிலையங்கள் தவிர்த்து பிற தொழிற்சாலைகளுக்கு நிலக்கரி கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன, இதுகுறித்து சரக்கு லாரி உரிமையாளர்கள் கூறுகையில், “இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தப்படி சரக்கு லாரிகளுக்கான வாடகையை சம்பந்தப்பட்ட முனைய நிர்வாகங்கள் உயர்த்தி தர வேண்டும், ஆனால்; இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் வாடகை உயர்த்தப் படவில்லை… இதே நிலை தொடர்ந்தால் நிலக்கரி வினியோகிக்கும் பணி முற்றிலுமாக முடங்கும்” என்றும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிலக்கரியின் அளவு நாற்பது சதவீதம் வரை குறைக்கப் பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்து பல மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் சரக்கு லாரி உரிமையாளர்களின் இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டால், மின் உற்பத்தி பெரும் சரிவை சந்திக்கும் ஆபத்து ஏற்படும் என்பதை இதன்மூலம் தெளிவாக உணரலாம்.
– தேனீஸ்வரன் –