தமிழ்நாட்டில் 77 லட்சம் தொழிலாளர்களின் பதிவுத் தரவுகள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொழிலாளர்களின் ஆவணங்களை பாதுகாக்கத் தவறிய தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கவனம் ஈர்த்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்டுமான (ம) அமைப்புசாரா தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள் என சற்றேர 77 லட்சம் பேர் அரசுத் தரப்பில் இருந்து வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் பெற வேண்டி, தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட அனைத்துத் தொழிலாளர்களின் தரவு ஆவணங்கள் தொலைந்து விட்டதாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தொழிலாளிகளிடம் தெரிவித்த
அதிர்ச்சி தகவல் வெளியானது.
காவல்துறை, வருவாய்த்துறை,
பத்திரப் பதிவுத்துறை போன்ற துறைகளில் பணியாற்றுவோரின் ஆவணங்கள் பாதுகாப்பாக அரசு ஆவண காப்பகத்தில் இருக்கும் போது தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் தரவுகள் மாயமானதாக அதிகாரிகள் கூறியிருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.
இதையொட்டி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் அலுவலகத்தை
திடீரென்று ஊர்வலமாகப் போய் சிஐடியு தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்தும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
PKM