பாஜகவை சென்னை பிரஸ் கிளப் கண்டிப்பது ஏன்?

ஹமீத் உரை. அருகில் நிர்வாகிகள் மற்றும் மூத்தோர்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பத்திரிகையாளர் விரோத போக்கு கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சென்னை பத்திரிகையாளர் மன்ற (சென்னை பிரஸ் கிளப்) தலைவர் அ. செல்வராஜ், செயலாளர் ச.விமலேஷ்வரன் தலைமையில் ஏராளமான பத்திரிகையாளர்கள், அரசினர் விருந்தினர் மாளிகை அருகே நேற்று மாலை திரண்டனர்.

இதுபோன்ற ஆர்ப்பாட்ட நிகழ்வுகளின் போதுதான், நேரடி மற்றும் மறைமுக அரசியல் வித்தைகளின் பர்சன்டேஜ் பல்லிளிப்பதை பார்க்க முடிகிறது.
பொதுவாகவே சென்னை அரசினர் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம்- ஆர்ப்பாட்டங்கள் நடத்த, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத குறிப்பிட்ட இடம் உண்டு. அந்த வகையில் ஆயிரக்கணக்கான போராட்ட நிகழ்வுகள் குறிப்பிட்ட அந்த இடத்தில் நடந்துள்ளது. இருப்பினும் நேற்றைய ஆர்ப்பாட்ட நிகழ்வின் போது போலீசார் கெடுபிடியை கடைபிடித்தது கண்முன்னே தெரிந்தது. “கெடுபிடியின் பின்னே இருப்பது ஆளுங்கட்சியா, அல்லது பாஜகவா என்று நம்மை யோசிக்க வைத்து விட்டார்களே” என்று பத்திரிகையாளர்கள் பலர் வாய்விட்டே முணு முணுத்தனர்.

சிந்துபாஸ்கர் -ஆ.வேல்முருகன் உள்ளிட்டோர்

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் பாஜக தலைவர் அண்ணாமலை. அந்த வகையில் பத்திரிகையாளர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை. “அறிவாலயத்துக்கு ஆதரவாகப் பேசினாலோ, எழுதினாலோ, உரிய சன்மானம் உங்களுக்கு கிடைத்து விடும்” என்று ஒரு பத்திரிகையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அண்ணாமலை எமோஷனலாக கருத்து தெரிவித்ததை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

திமுகவின் சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “ரெட் லைட் ஊடக உலகம் என்று குறிப்பிட்டார். அப்போது யாரும் அந்த வார்த்தையை எதிர்க்கவில்லை, உங்களின் ஊடக தர்மம் அன்று எங்கே போனது” – என்று பாஜக தரப்பு அண்ணாமலையின் பேச்சுக்கு நியாயம் கற்பிக்க முயற்சிக்கிறது. திமுகவின் ஆர்.எஸ்.பாரதியின் அந்த பேச்சுக்கு முன்பு, பத்திரிகையாளர்களை குறிப்பாய் பெண் பத்திரிகையாளர்களை மிகத் தரக்குறைவாக சித்தரித்தவர் எஸ்.வி.சேகர். எஸ்.வி. சேகர் காலகட்டத்துக்கு முன்னும் சிலர் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசி வந்திருக்கிறார்கள். இப்போது, பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களை பேசியுள்ளார். எதிர்ப்புகள் வலுத்த பின்னும், பாஜக தரப்பு ‘நேற்றும் நேற்று முன்தினமும் அவர்கள் அப்போது அப்படி பேசியிருக்கிறார்களே, இப்படி பேசியிருக்கிறார்களே’ என்பதையே தங்கள் தரப்பு நியாயத்துக்கான வாதப் பொருளாகக் கைக் கொள்வது, முறையற்றது, ஜனநாயகத்தில் பேராபத்தும் கூட.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பத்திரிகையாளர்கள் நேற்று ஓரணியில் நின்று போராட்டத்தை முன்னெடுத்தனர். பிற பத்திரிகையாளர் சங்கங்களைச் சேர்ந்தோர் மற்றும் சீனியர் ஜர்னலிஸ்ட்டுகள் சிந்துபாஸ்கர், பிரகாஷ் எம். சுவாமி (சர்வதேசம்), மீடியா அகாடமி ஹமீத், ஆ.வேல்முருகன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினர்.

ந.பா. சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *