சென்னை ஒரகடத்தில் ஜேகே என்ற தனியார் வாகன வட்டகை (லாரி டயர்கள்) தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து 2023 பிப்ரவரி 9-ஆம் தேதி பிரேசில் நாட்டிற்கு கப்பல் மார்க்கமாக ஏற்றுமதி செய்ய பெட்டக சரக்குந்து (கன்டெய்னர் லாரி) ஒன்றில் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான 1500 வட்டகைகள் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து 2023- மே மாதத்தில் பிரேசில் நாட்டிலுள்ள வட்டகை விற்பனை நிலையத்திற்கு சென்ற அந்த சரக்கு பெட்டகத்தை திறந்து எண்ணிக்கையை சரிபார்த்த போது, 8.29 லட்ச ரூபாய் மதிப்பிலான 495 வட்டகைகள் குறைவாக வந்துள்ளதாக அதன் முகவர் சென்னையில் உள்ள ஜேகே வட்டகை தொழிற்சாலை நிறுவனத்திற்கு தெரிவிக்கவே, அவர்கள் இது குறித்து, சம்பந்தப்பட்ட ஏற்றுமதி நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். சரக்கு பெட்டக ஏற்றுமதி முனைய மேலாளர், சம்பவம் குறித்து ஆவடி போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். வட்டகைகளை தொழிற்சாலையில் இருந்து துறைமுகத்திற்கு கொண்டு சென்ற பெட்டக சரக்குந்தில் பொருத்தப் பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியை ஆய்வு செய்தபோது சம்பந்தப்பட்ட பெட்டக சரக்குந்து, (லோடு கன்டெய்னர்) மூன்று வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டதும், 5 மணி நேரம் காலதாமதமாக துறைமுகத்திற்குள் சென்றதும் தெரிய வந்தது. இதனால் வட்டகைகள் மாயமான விவகாரத்தில் சரக்குந்து ஓட்டுனருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் சரக்குந்து ஓட்டுநர் தலைமறைவாகி இருக்கிறார். அவரை, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
பொன்.கோ.முத்து