சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் வடக்கு இணை போலீஸ் கமிஷனர் ரம்யாபாரதி நேரடி கண்காணிப்பில் போதை ஒழிப்பு (7நாட்கள்) சிறப்பு நடவடிக்கையை ஒருவார காலம் தொடர்ந்து மேற்கொண்டனர். போலீசாரின் நடவடிக்கையில் முதற்கட்டமாக ஆறுபேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நேர் நிறுத்தலுக்குப் பின்னே சிறையில் அடைக்கப் பட்டனர். ஆந்திராவின் ஓங்கோல் பகுதியில் ஆய்வகம் அமைத்து போதைப் பொருளை தயாரித்து பல மாவட்ட – மாநிலங்களுக்கு அனுப்பி விற்பனையில் ஈடுபட்ட கும்பலை கூண்டோடு பிடித்து போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பெண்கள் உட்பட 28 நபர்கள் கைது செய்யப் பட்டனர். 86.3 கிலோ கஞ்சா, 2 கிலோ எபிடிரைன் போதைப் பொருள், 860 கிராம் மெத்தம்பெடமைன் போதை பவுடர், 1,101 நைட்ரோவிட் மாத்திரைகள்,
1இலகுரக வாகனம் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. போதை தடுப்புக்கான சிறப்பு நடவடிக்கை (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் வழிகாட்டலில், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அதில் சப் – இன்ஸ்பெக்டர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்களைக் கொண்ட குழுவினர் களத்தில் இறங்கினர். சென்னை புது வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வானமாமலை தலைமையிலான சிறப்புப் படையின் தேடுதலில் போதைப்பொருள் விற்கும் சங்கிலித்தொடர் கூட்டம் அடுத்தடுத்து சிக்கிக் கொண்டது. புது வண்ணாரப்பேட்டை ரோஹித் மணிகண்டன் வசமிருந்து 2 கிலோ கஞ்சா, 5 கிராம் மெத்தம்படமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ரோஹித் மணிகண்டனிடம் நடந்த விசாரணையில் மெத்தம்படமைன் போதைப் பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த, காதர் மொய்தீன், நாகூர் ஹனிபா, 4.காஜா நவாஸ் உள்ளிட்ட ஆறுபேர் சிக்கினர். வழக்கில் தொடர்புடைய சேர்ந்த பட்டுலேலா வெங்கட் ரெட்டி, ஷேக் முகமது ஆகியோரும் அடுத்ததாக நேற்று பிடிபட்டனர். பிடிபட்ட நபர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் 860 கிராம் மெத்தம்படமைன் போதைப் பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல் ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான டீம் ஹெபிட்ரைன் என்ற போதைப் பொருளை வைத்திருந்த நரேந்திரகுமார் (கொருக்குப்பேட்டை) என்பவரை கைது செய்தது. அவரிடமிருந்து 2 கிலோ ஹெபிட்ரைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய விஜயன் (எ) விஜயகுமார் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.
தலைமைச் செயலக குடியிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் கீழ்பாக்கம் துணைகமிஷனர் தனிப்படை குழுவினர் சோதனையில் நியூ ஆவடி ரோட்டில் ஈச்சர் வேனில் கஞ்சா கடத்தி வந்த. பூந்தமல்லி பிரதீப்ராஜ் மற்றும் விழுப்புரம் வரதராஜூ ஆகியோரிடமிருந்து கஞ்சாவும் கஞ்சா பயன்பாடுக்கு கடத்தப்பட்ட. ஈச்சர் வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. சேத்துப்பட்டு போலீஸ் ஸ்டேசன் எல்லையில் ஆந்திராவைச் சேர்ந்த ஷேக் மொய்தீன் கஞ்சாவுடன் சிக்கினார். விஜயன் என்பவர் உள்பட இன்னும் சிலரை போலீசார் தேடிவருவதாக தெரிகிறது. உடல் வலி நிவாரண மாத்திரையான ‘நைட்ரோவிட்’ டை போதைப் பொருளாக பயன்படுத்தி வரும் கும்பல் குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
– ந.பா.சேதுராமன் –