முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் வீடு உள்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. இன்று அதிகாலை (15.03.2022) முதலே எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவர் தொடர்புடையதாகக் கருதப்படும் 58 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டதால் கோவை மாநகரம் பரபரக்கத் தொடங்கி விட்டது.
எஸ். பி. வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரூ 58.23 கோடிக்கு கூடுதலாக சொத்து சேர்த்ததாக கிடைத்துள்ள தகவல் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
எஸ். பி வேலுமணியின் சகோதரர் அன்பரசன் வீடு, கடை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும், கோவை மற்றும் சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் எஸ். பி. வேலுமணி தொடர்பு நபர்களின் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.
கோவையில் மட்டும் 41 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ். பி. வேலுமணி அவார் குடும்பத்தார் மற்றும் வெளிநபர்கள் உள்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர சோதனை நடத்தி வருகிறது.
அரசு ஒப்பந்தங்களை தனக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியதாக கடந்தமுறை வழக்கு தொடுத்திருந்த நிலையில் தற்போது சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
– கோட்டையன் –