ஆற்றுமணலை சுரண்ட ‘தனி’ சாலை அமைப்பு ! பதறும் பொதுமக்கள்…

அதிகாரிகளின் அலட்சியத்தால், கனரக வாகனங்கள் வந்து செல்ல (?!) வசதியாக ஆரணி ஆற்றின் குறுக்கே 10 அடி உயரத்திற்கு சாலையை (அட! ) சிலர் அமைத்துள்ளனர். “அந்த” சிலருக்கு என்ன பெயர் என்பதை அதிகாரிகள்தான் முடிவுசெய்து சொல்ல வேண்டும். இனி சிறப்புக் கட்டுரைக்குள் என்னோடு பயணியுங்கள் மக்களே.

திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது ஆரணி ஆறு. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கர்ணித் மலைப் பகுதியில் துவங்கும் ஆரணி ஆறு, பிச்சாட்டூர் அணையின் முனையை கடந்து, தமிழக எல்லைப் பகுதியான ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக லட்சுமிபுரம் அணைக்கட்டை அடைகிறது. பின்னர் அதே வழியாக பழவேற்காடு பகுதியில் வங்கக்கடல் சென்று கடலில் சங்கமிக்கிறது. ஆரணி ஆற்றின் மொத்த நீளம்,114.8 கி.மீ. ஆற்றின் கரைப் பகுதியில் 4,500 ஏக்கர் பரப்பில் விவசாயப்பணி நடக்கிறது. லட்சுமிபுரம், பாலீஸ்வரம் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பு அணைகளில் தலா 5,000 கன அடி தண்ணீர் மட்டுமே சேகரிக்க முடியும் என்பதே யதார்த்தம். ஆற்றில் போதிய தடுப்பணைகள் இல்லாததால், ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவை பொறுத்து 7 முதல்10 டி எம் சி தண்ணீர் வரை வீணாகவே (எத்தனை கொடுமை பாருங்கள்) சென்று கடலில் கலக்கிறது. கடந்த காலங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த மணல் கொள்ளை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து பூமியில் உப்பு நீர் அதிகரித்து விட்டது. அதன் எதிரொலியாக, “மூன்று போகம் விளைநிலத்தில் தற்போது ஒரு போகம் பயிர் செய்வதே கடினமாக இருக்கிறது” என்கின்றனர் விவசாயிகள். முறையான பராமரிப்பு இல்லாததால் ஆற்றின் பல பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் முளைத்து அந்தப்பகுதியே அடர்ந்த வனம்போல் காணப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், பொன்னேரி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளும் மொத்தமாக சேகரிக்கப்பட்டு ஆற்றில் கொண்டு வந்து கொட்டுகிற சூழலால் குப்பை மேடுகள் ஆற்றில் தனியாக குன்றுகள் போல் காட்சியளிக்கிறது. மேலும் குப்பைகள் எரியூட்டப் படுவதால் அதிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை காற்றில் கலந்து, பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட வேதனைப் பரிசுகளும் வந்து சேர்கிறது. இறந்தவர்களின் உடல்களை எரியூட்டவும், அடக்கம் செய்யவும் ‌ முடியாத அளவிற்கு சுடுகாட்டையும் குப்பைகள் ஆக்கிரமித்துள்ளன. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் நீர் நிலையில் உள்ள மரக்கிளைகளில் கண்ணுக்கு குளிர்ச்சியாக பறவைகள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து இருப்பது போன்று, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது கொட்டி கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. அப்போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குப்பைக் கழிவுகள் ஒருபக்கம்- சீமைக்கருவேல மரக்கிளைகளில் சிக்கிக் கொண்டு மிரட்டும் பிளாஸ்டிக் குப்பைகள் இன்னொருபுறம் வேதனையின் அடையாளம். ஏற்கெனவே நீர்வரத்து துணை கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் மணல் சேர்ந்துள்ளது… இங்கேதான் செயற்கையாக “அந்த – சாலை! ) அமைக்கப் பட்டிருக்கிறது. மணற்குவியலை மொத்தமாய் சுரண்டி கொள்ளையடிக்கும் நோக்கோடு அந்த சாலை அமைந்துள்ளது. பொன்னேரி அரசு பேருந்து பணிமனை எதிரே ஆரணி ஆற்றின் குறுக்கே லாரிகள் எளிதாக வந்து செல்வதற்காக ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு பாறைகளை பரப்பி அதன்மீது மண்ணை கொட்டி சமப்படுத்தி 10 அடி உயரத்திற்கு சாலையை மிகச் சிறப்பாகவே உருவாக்கி வைத்துள்ளனர் மணல் மன்னர்கள். பொதுப்பணித் துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை விவசாயிகள் தரப்பில் இதுகுறித்து புகார் மனுக்கள் பலமுறை அளிக்கப்பட்டும் நடவடிக்கை ஏதும் இல்லை என்கிறார்கள் ஊர்மக்கள். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, நீரோட்டம் தடைபட்டு பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இதன் நீட்சியாக இருக்கும் என்பது தெள்ளத் தெளிவு. தமிழ்நாடு அரசு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதன் பின்னராவது உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். ஆரணி ஆற்றின் குறுக்கே மணல் கொள்ளையர்கள் சட்டவிரோதமாக அமைத்துள்ள சாலையை அப்புறப்படுத்தவும், அதிலுள்ள குப்பை கழிவுகளை அகற்றி ஆரணி ஆற்றின் இயல்புத் தன்மையை பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மக்களின் கோரிக்கை !

– ‘மக்கள் தொண்டன்’ பிகேஎம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *