நான் ஊருக்குப் புதுசு, டூவீலர் லைசென்ஸ்
சென்னையில் வாங்க முடியுமா ?
ஃபோர் வீலர் லைசென்ஸை
எப்படி வாங்குவது ?
வேற ஸ்டேட்ல இருந்து வந்திருக்கேன்
தமிழ்நாட்டில் லைசென்ஸ் வாங்கலாமா ?
கேரளா டி.எல்., (டிரைவிங் லைசென்ஸ்) தான் கையில்
இருக்கு, தமிழ்நாட்ல வண்டி ஓட்ட முடியுமா ?
வண்டிக்கு இன்சூரன்ஸ் பண்ணனுமாமே ?
எஃப்.சி.ன்னா என்ன, அதை எப்படி செய்யறது ?
பொல்யூசன் சர்ட்டிபிகேட் நான் வாங்கணுமா ?
ஆட்டோ பர்மிட்டும், லைசென்ஸும் வாங்கணும்…
இன்சூரன்ஸ் க்ளைம் பண்ணுவது எப்படி ?
கேள்விகள் நிறைய மக்கள் மனதில் இருக்கிறது,
அதற்கான விடையை குழப்பம் இல்லாமல் சொல்வதோடு
மக்களை வழிநடத்தவும் அடுத்தடுத்த பக்கங்களில்
வரிசையாக கொடுத்துள்ளேன்.
அண்டை மாநில வாகனங்களை
வாழும் மாநிலங்களில் பதிவு செய்யமுடியுமா ?
அண்டை மாநில வாகனங்களை, வாழும் மாநிலங்களில் நிச்சயம் பதிவு செய்ய முடியும், அதற்கு வழி இருக்கிறது.
தேவையான ஆவணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
(1) வாகனத்துக்கான ஆர்.சி.புக், வாகனத்துக்கான இன்சூரன்ஸ், வாகனத்துக்கான பொல்யூசன் சான்று (மற்றும்) தடையில்லா சான்றாவணம், (என் ஓ சி), படிவ எண் 28 ஆகியன அவசியம் தேவை.
ஆர்.சி.புக், இன்சூரன்ஸ், பொல்யூசன் சான்று மற்றும் என்.ஓ.சி. போன்றவற்றின் ஜெராக்ஸ் காப்பியோடு, ஒரிஜினலும் கையில் வைத்திருப்பதும் அவசியம்.
(2) வாகனம் பதிவு செய்தலுக்கு, பார்ம் எண் 20 ( 20 -ல் வாகனம் பற்றிய விவரங்கள் இருக்கும்) பார்ம் எண் 27 (ஆர்சி புக் அதுதான் – மறு பதிவுக்கான முக்கிய ஆவணம் அதுவே) விலாச மாற்ற படிவ எண் 33, பெயர் மாற்ற படிவ எண் 29 மற்றும் 30 ஆகியவையும் தேவை.
(3) மாசுக் கட்டுப்பாடு வாரிய சான்றுடன், துணைச்சான்றாக காவல் சான்று, (போலீஸ் வெரிபிகேசன்) சான்று, சுயசான்று (செல்ப் அபிடவிட்), வரி (டாக்ஸ்) யை அடுத்ததாக தமிழ்நாட்டில் செலுத்த வேண்டும்.மத்திய அரசு ஊழியராக இருந்தால் கண்டினியூடாக்ஸ் ( ரோட் டாக்ஸ்) (மறு பதிவுக்கான கட்டணம் ஆகியன ஆர்டி ஓ அலுவலகத்தில் செலுத்த வேண்டும். வாகனத்தின் உரிமையாளர், வேறு ஒரு நபராக இருக்கும் பட்சத்தில், தன் பெயருக்கு மாற்ற, அதற்குரிய கட்டணத்தை ஆன் லைன் மூலம் செலுத்த வேண்டும். வாகன உரிமையாளர், நாம்தான் என்கிற போது விலாச மாற்றத்துக்குக்கு உண்டான கட்டணம் மட்டும் செலுத்தவேண்டும். எல்லாம் முடிந்தபின், மோட்டார் வாகன ஆய்வாளர், வாகன தணிக்கை செய்த பின் மறுபதிவு எண் வழங்கப்படும்.
(4) இந்தியநாட்டின் ராணுவப் பணியினர் என்கிற போது கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது, சேவை வரிகளில் ராணுவத்தாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெற என்ன செய்வது ?
(1) பழகுநர் உரிமம் எனப்படும் எல்.எல்.ஆர். பெற கல்வித்தகுதி ஏதும் தேவை இல்லை. வயது சான்று, முகவரி சான்று மட்டும் போதுமானது. இதை ஆன் லைன் மூலம் தான் பதிவுசெய்ய வேண்டும். திருநங்கை மற்றும் திருநம்பி ஆகியோருக்கும் இது பொருந்தும்.
நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெற, ஒரு மாதம் கழித்து ஆன் லைனில் பதிவு செய்ய வேண்டும். அதாவது காலாவதி காலமான (எக்ஸ்பயரி டேட்) 6 மாத காலம் முடிவதற்குள், அரசு வேலை நாட்களில் முறைப்படி பதிவு செய்து கொண்டால் நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெற தகுதி பெற்று விடுகிறீர்கள்.
(2) ஆன் லைனில் பதிவு செய்து விட்டு நீங்கள் வாகனத்துக்கான எல்.எல்.ஆர்., பெற்ற இடத்திற்குப்போய், 2 சக்கரம், நான்கு சக்கரம் ஆகியவற்றில் எதை ஓட்ட நினைக்கிறீர்களோ, அங்கு ஓட்டிக்காட்ட வேண்டும்., அதன் பின்னரே ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்) அங்கு கொடுக்கப்படும்.
2 சக்கர அல்லது 4 சக்கர வாகனத்தில் எதுவோ அல்லது, இரண்டும் சேர்த்தோ ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்) பெறுவதாக இருந்தால் அதற்குரிய ஆவணம், வாகனப்பதிவு சான்று, காப்பு சான்று ( இன்சூரன்ஸ்) நகல் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
(3) வேறு ஒருவரின் வாகனமாக இருந்தால் வாகனத்தை ஓட்டிக் காட்டலாம். அதே நேரம் வாகன உரிமையாளரின் அனுமதிக் கடிதம் பெற்றிருக்க வேண்டும், மோட்டார் வாகன ஆய்வாளர் கேட்கும் போது அதை தயாராக கையில் வைத்திருந்து காட்ட வேண்டும்.
கடிதத்தின் உண்மைத்தன்மையை மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு செய்த பின்னரே வாகனத்தை ஓட்டிக்காட்ட அனுமதி அளிப்பார். முறைப்படி வாகனம் ஓட்டி காட்டிய பின்னர், வாகன ஓட்டியான உங்களுடைய படிவத்தை பதிவு செய்து கொண்டு (அப்ரூவல்) புகைப்பட மையம் (எல்காட் ரூம்) அழைத்துச் சென்று அங்கே உங்களை புகைப்படம் எடுக்க வைப்பார். புகைப்படம் எடுத்த பின், ஓட்டுநர் உரிமத்தை (லைசென்ஸ்) அதேநாள் மாலை 5 மணிக்குள் சம்மந்தப்பட்ட அலுவலகம் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
-இன்னும் சொல்கிறேன் !
உங்கள் ‘விகடகவி’ எஸ். கந்தசாமி