சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் வைபவம் இந்தியாவில் மட்டுமே நிகழ்கிற ஒன்று. சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் (பிரம்மோற்சவம்) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மட்டுமே நடக்கிறது. மன்னல் கரிகால் சோழனால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள், மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் இங்குதான் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பத்து நாள் பிரம்மோற்சவ விழா இங்கு நடைபெறுவது வழக்கம். அதற்கான கொடியேற்றம் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. ஐந்தாம் நாளன்று சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் சிவபக்தரான அகத்திய மாமுனிவருக்கும், விஷ்ணு பக்தரான பரத்வாஜ முனிவருக்கும் ஒருசேர சூரிய உதயத்திற்கு முன்பாக காட்சியளித்ததாக புராண வரலாறு தெரிவிக்கிறது. அந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் அதிகாலை ஆலயத்திலிருந்து பார்வதி தேவி, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுடன் புறப்பட்டு மகாவிஷ்ணுவை சந்திப்பதற்காக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அகத்தீஸ்வரர் பெருமான் வந்து அருள, அதனைத் தொடர்ந்து கருடவாகனத்தில் சன்னதியில் இருந்து புறப்பட்ட கரிகிருஷ்ண பெருமாள் அகத்தீஸ்வரை நேரடியாக சந்திக்கும் வைபவம் நடைபெற்றது. அப்போது சிவாச்சாரியார்கள் சிவபெருமானின் கழுத்தில் அணிந்திருந்த மாலையை மேளதாளங்கள் முழங்க கொண்டு சென்று மகாவிஷ்ணுவிற்கு அணிவித்தனர். அதே போன்று மகாவிஷ்ணு கழுத்தில் அணிந்திருந்த மாலையை வைணவச் சான்றோர் கொண்டு சென்று சிவபெருமானின் கழுத்தில் அணிவித்தனர். அதைத் தொடர்ந்து அரியும் அரனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் இரு பெருமானும் ஒரு சேர பக்தர்களுக்கு காட்சி அளித்து அருளினர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஓம் நமச்சிவாய ஓம் நமோ நாராயணாய என்று எழுப்பிய கோஷத்தால் அந்தப் பகுதியே அதிர்ந்தது. அப்பொழுது நிகழ்த்தப்பட்ட வான வேடிக்கை களால் நகரமே வண்ணமயமாக ஜொலித்தது…
– தேனீஸ்வரன் –