திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜவகர். பிரபல ரவுடி. கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இவர்மீது நிலுவையில் உள்ளன. அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடிக்கும், ஜவஹருக்கும், இடையே “ஏரியாவை தக்க வைத்துக் கொள்வது யார்?” என்பதில் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று, உறவினரான சிஜான் என்பவருடன் ஜவஹர் கொலை திட்டத்துடன் சுற்றியதாக கூறப்படுகிறது. ஜவஹரின் திட்டத்தை முன்னரே அறிந்து கொண்டு விட்ட எதிர்தரப்பு ரவுடி, கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜவஹரையும் சிஜானையும் சுற்றி வளைத்தனர். திட்டமிட்டபடி அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் ரவுடி ஜவஹர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி போலீசார், கொலை செய்யப்பட்ட ஜவஹர் உடலை உடற்கூராய்வு பணிக்காக, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரிவாள்வெட்டில் படுகாயமடைந்த சிஜானை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து சம்பவத்திற்கு காரணமாகக் கருதப்படும் மற்றொரு ரவுடியை பிடித்து விசாரணை நடத்தி வருவதோடு கொலை செய்து விட்டு தலைமறைவான ஆறு பேரை தேடி வருகின்றனர். ஏரியாவை தக்க வைத்துக் கொள்வதில் ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஏராள போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். ரவுடி ஜவஹர் கொலை சம்பவ சூடு ஆறுவதற்குள் இன்னொரு பிரபல ரவுடியான “ஒற்றைக்கை” மூர்த்தியும் அதே திருவள்ளூர் மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடையை ஒட்டி சட்டவிரோத மதுபான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது 10ஆம்தேதி காலை மதுபான விடுதிக்குள் புகுந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த ஒற்றை கை மூர்த்தி என்ற பிரபல ரவுடியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் போலீசார் ஒற்றைக்கை மூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ரவுடி ஒற்றைக்கை மூர்த்தி மீது 6 கொலை உள்ளிட்ட 28 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. சட்டவிரோத மதுபான விடுதி நடத்துவதில் ஏற்பட்ட முன்பகை காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றதா ? அல்லது ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலால் சம்பவம் நிகழ்ந்ததா என்று விசாரணை நடைபெற்று வருகிறது பொன்னேரியில் பிரபல ரவுடி ஜவஹர் 9ஆம்தேதி இரவு கொலை செய்யப்பட்ட பதற்றம் அடங்குவதற்கு முன்பாக மற்றொரு ரவுடி 10ஆம் தேதி காலை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகரித்து உள்ளது…
– தேனீஸ்வரன் –