பெருநகரங்களில் உள்ள மண்டலக்குழுத் தலைவர் பதவியை விடப் பெரிய பதவியாக மாவட்டக் கவுன்சிலர் பதவி கருதப் படுகிறது. புறநகர் மாவட்டங்களில், மாவட்டக் கவுன்சிலரின் ஒரு கையெழுத்து அத்தனை மகத்தானது. அப்படிப்பட்ட அதிகாரக் கையெழுத்துக்கு ஐந்தாண்டு உரிமைதாரர்கள் அதை மக்களுக்கான கையெழுத்தாக மாற்றுவது அரிதினும் அரிதாகி வருகிறது. நீதிமன்றச் சட்ட திட்டங்களோ, தீர்ப்புகளோ, பஞ்சாயத்து ராஜ் சட்டங்களோ ஊரக – உள்ளாட்சி நடைமுறைகளில் துளியும் கடைபிடிக்கப் படுவது இல்லை; அனைத்தும் காற்றில் பறக்கிறது. பெண்கள் தலைமைப் பொறுப்பில் உள்ள நூறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு திடீர் விசிட் அடித்தால் 99 பேர் வீட்டில் இருப்பதும், கணவன் அப்பா சகோதரன் போன்ற உறவுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் அதிகாரப் பொறுப்பில் ஒளிந்திருப்பதும் தெரிய வரும்! சட்ட திட்டங்கள் யாவும் இந்த போக்கினை ஏற்பது இல்லை என்பதோடு அவை குற்றச்செயல் என்றே தெளிவாய்ச் சொல்கின்றன. பெயரிலேயே அரசாங்கத்தை வைத்துள்ள ஒருவரின் மனைவி, பெயரளவில் சென்னை புறநகர் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்றக் கவுன்சிலர் பொறுப்பில் உள்ளார்.
கல்லூரி விரிவுரையாளர் (லெக்சரர்) பணியில் முழு நேரமும், ஊராட்சிமன்ற பெண் கவுன்சிலருக்குப் போய் விடுவதால் மாவட்ட மக்களுக்கு ஊராட்சி மன்றக் கவுன்சிலராக (ஆக்டிங்) இருப்பது அவர் கணவர்தான். ஏதாவது அரசு நிகழ்ச்சியோ அல்லது கட்சித் (திமுக) தலைமையிருந்து விஐபிக்கள், மாவட்டத்துக்கு வரப் போவதாகவோ தகவல் வந்தால் மட்டும் காலேஜூக்கு லீவு போட்டுவிட்டு ஆஜராகி விடும் நல்ல பழக்கம் ஊராட்சி மன்றக் கவுன்சிலருக்கு இருக்கிறது. பிற நாட்களில் ஊ.ம.க. பதவியை அலங்கரிப்பது அவர் கணவரே. உள்ளாட்சித் துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரலை (டெண்டரை), அரசு லிஸ்ட் போட்டால், லிஸ்ட்டில் கோரப்பட்டுள்ள டெண்டர்களை திமுகவைத் தவிர்த்து பிறருக்கு மட்டுமே அளிப்பதில் உறுதியாய் இருக்கிறார் லெக்சரர். “நம்ம கட்சிக்காரனுக்கு டெண்டரைக் கொடுத்தா ஐந்து பர்சென்ட் கமிஷன தரலாமா பத்து பர்சன்ட் தரலாமான்னு யோசிக்கறாங்க. வேற ஆளுகளுக்கு கொடுத்தா, 25 பர்சன்டை சத்தம் போடாம குடுத்துட்டு போய்ட்டே இருக்காங்க. திமுககாரங்க கிட்டே டெண்டர் கொடுத்தா, அவங்க குடுக்குற ஐந்து பர்சென்டையும் தண்டோரா போடாத குறையா வெளிய சொல்லிடறாங்க. இதுக்கா நாங்க செலவ பண்ணி தேர்தல்ல நின்னு ஜெயிச்சோம்”? என்று லெக்சரரின் கணவர் ஒரு முறை வெளிப்படையாக சொல்லப்போக, ‘நீங்களே ரிட்டர்ன் டியெம்கேதானே?” என்று கூட்டத்தில் யாரோ அதற்குப் பதிலடி தர, அன்றைய டெண்டர் கேன்சலாகி இருக்கிறது. நமக்கு என்னவோ, லெக்சரரின் கணவர் பக்கம்தான் தர்மம் (?!) இருப்பது போல் படுகிறது. மேனாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் – இந்நாள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டில் – கண்காணிப்பில்தான் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் எப்போதுமே இருக்கிறது… நமக்கு நாமே திட்டம் தொடங்கி கிராமம் கிராமமாக மு.க.ஸ்டாலின் பயணித்தது உள்ளாட்சியை வலுப்படுத்திடத்தான்… நடந்து கொண்டிருக்கும் அநியாயங்களைப் பார்த்தால் போடாத சாலைக்கே முப்பது முறை பில் போடுவார்கள் போலிருக்கிறது… இப்படிப்பட்ட உள்ளாட்சிமன்ற நிர்வாகிகளிடமிருந்து நாட்டு மக்களையும் நாட்டின் முதலமைச்சரையும் காப்பாற்றியே தீர வேண்டும்…
ந.பா.சே – பிரீத்தி எஸ்.