
‘மக்களின் அடிப்படை பணிகளுக்கு நிதி ஒதுக்காமல் பேருந்து நிலைய பராமரிப்பு பணிக்கு 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது ஏன்?” என்று திமுக பேரூராட்சித் தலைவரோடு விடுதலை சிறுத்தைகள் வாக்குவாதம் செய்தது மீஞ்சூர் பேரூராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டம், திமுக பேரூராட்சித் தலைவர் ருக்மணி தலைமையிலும், செயல் அலுவலர் மகேஸ்வரி முன்னிலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில் 2 வது வார்டு விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் அபூபக்கர் பேசும்போது, “பொது மக்களின் அடிப்படைத் தேவையான கழிவு நீர் கால்வாய், சாலை வசதி ஆகியவற்றை செய்து தரும்படி பலமுறை வலியுறுத்திள்ளோம். இருப்பினும் அதற்கு நிதி ஒதுக்காமல் பணிகளை தடுத்து நிறுத்துவது யார்? மாத மாதம் கூட்டத்தை நடத்தாமல் காலம் தாழ்த்துவதற்கு என்னுடைய கண்டனம் தெரிவிப்பதோடு, மன்ற கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வராமல் பேருந்து நிலைய பராமரிப்பு பணிக்கு 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது ஏன்?” என விசிக உறுப்பினர் அபூபக்கர், அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்து பேசினார்.

இதனால் பேரூராட்சி தலைவர் ருக்மணிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் அபூபக்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
P.K.M
