விமானத்தில் வந்த ‘விலங்கு’ மனிதர்கள்! முழு பின்னணி…

கடல் கடந்து விவாதிக்கப்பட்டு வருகிற மிக நெருக்க நிகழ்வு, இந்தியர்கள் 103 நபர்களை கை விலங்குடன் அமெரிக்க அரசு, விமானத்தில் அனுப்பி வைத்ததுதான். சமூகத்தின் மீது தீரா நல்லெண்ணம் கொண்ட இருபெரும் ஆளுமைகளின் பார்வையை இங்கே பதிவது கடமையும், காலத்தின் அவசியமும் ஆகிறது.

இரா.முருகவேள் மற்றும் ட்டி. அருள்ராஜ் கருத்துகள் இது.

அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான திரு. இரா. முருகவேள் பார்வை:

“கைவிலங்குக்கு எதிராக இந்திய மக்கள், மனித உரிமை அமைப்பினர், இடதுசாரிகள், நீதித் துறையினரின் போராட்டம் மிகவும் முக்கியமானது.

சுக்லா, சுனில் பாத்ரா வழக்குகளில் தோழர், நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் கைவிலங்கு, மனித நேயத்துக்கும், நாகரீக சமூகத்தின் விழுமியங்களுக்கும் எதிரானது என்று தீர்ப்பளித்தார்.
இது நடந்தது 1978, 80 ஆண்டுகளில்.

1995 ஆம் ஆண்டு ஜனநாயகத்துக்கான குடிமக்கள் என்ற அமைப்பு அஸ்ஸாமில்
உல்ஃபா போராளிகள் உள்ளிட்டோர் மருத்துவமனையின் படுக்கைகளில் கூட கட்டிலுடன் விலங்கால் பிணைக்கப் படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. இதில் உச்ச நீதிமன்றம் விலங்கை முற்றிலும் தடை செய்தது.
(Citizens for democracy vs state of Assam. 1995. Supreme court.)

அதிமுகவின் ஜெயலலிதா அம்மையாரின் முதல் ஆட்சிக்காலம் தான் (1991-96) தமிழ் நாட்டில் மனித உரிமை மீறல்கள் தலைவிரித்து ஆடிய காலம். நக்சல் அமைப்பினர், தமிழ் தேசியவாதிகள், இஸ்லாமிய அமைப்பினர், வீரப்பன் வேட்டையில் கைது செய்யப் பட்டவர்கள் என்று சிறைகள் நிரம்பி வழிந்தன.

அப்போது ஒவ்வொரு சிறையிலும் நக்சல் அமைப்பினரும், தமிழ் தேசிய அமைப்புகளை சேர்ந்தவர்களும் கைவிலங்கு போடுவதற்கு எதிராக தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தனர்.

அந்த நேரத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா குண்டு வெடிப்பு வழக்கு கோவை PSJ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தோழர் முகிலனுக்கு கைவிலங்கு போட்டு அழைத்து வந்து வாசலில் வைத்து விலங்கை கழற்றி நீதிமன்றத்துக்கு அனுப்புவார்கள்.
முகிலன் கைவிலங்கை கழற்ற விடமாட்டார். நீதிபதி முன் கைவிலங்குடன் நின்று அதற்கு எதிராக முழங்குவார்.ஒவ்வொரு முறையும் நீதிமன்ற வாயிலுக்கு அருகே பெரிய போராட்டம் நடக்கும். வேறு என்னென்ன நடந்து இருக்கும் என்று நீங்கள்
ஊகித்துக் கொள்ளுங்கள். எத்தனை சண்டை, அடி உதை, தனிமைச் சிறை, உண்ணாவிரதம் இதற்கெல்லாம் பின்பே சிறைத்துறை அசைந்து கொடுத்தது.

மறியல் கைதிகள் என்று சிறை நிர்வாகம் சொல்லும் அரசியல் கைதிகளுக்கு மட்டும் விலங்கு போடுவதில்லை என்ற இடத்துக்கு அது மெள்ள நகர்ந்தது. பின்பு கைவிலங்கு பெரும்பாலும் இல்லாமல் போனது.

இப்போது வந்திருக்கும் புதிய குற்றவியல் சட்டம் (BNSS பிரிவு 43-ன் படி) கைதிகளுக்கு கை விலங்கு போடும் அதிகாரத்தை காவல் அதிகாரிகளுக்கு அளிக்கிறது . இந்தச் சட்டத்தின் மூலம் இதுவரை மனித உரிமை தளத்தில் பெறப்பட்ட தீர்ப்புகள் அனைத்தும் இல்லாமலாகிவிடும்.

எனவே, அமெரிக்க கைவிலங்கு மட்டும் பிரச்சினையல்ல. இந்தியாவிலும் அது போல ஒன்று தயாராக வாய்ப்பு இருக்கிறது” என்கிறார் திரு. இரா. முருகவேள்.

இது ஒரு கோணம்.
Tr. T.Arulraj சொல்வது இதுதான் :

“அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களை எல்லாம் அதிரடியாக வெளியேற்றுவது என்ற அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். வெளியேற்றப் படுபவர்கள் அனைவருமே சட்டவிரோதமாக குடியேறியவர்களா அல்லது உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பவர்களா என்பதெல்லாம் வேறு விடயம். ஆனால் அந்த நடவடிக்கைகளை எல்லாம் சவுதி, துபாய் போன்ற அரபு நாடுகள் செயல்படுத்துவது போலச் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்” என்கிறார் அயலக வாழ் ‘டெல்டா’ தமிழர் திரு. ட்டி. அருள்ராஜ். மேலும் அவரது கருத்து தொடர்கிறது.

“அரபு நாடுகளில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களை எப்படி வெளியேற்றுகிறார்கள் என்று முதலில் பார்ப்போம்.

தொழிலாளர் சட்டங்களை எவ்வளவுதான் கடுமையாக நடைமுறைப் படுத்தினாலும், பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் தொழிலாளர்களின் விசா காலாவதி ஆகிவிடுகிறது. இவ்வாறாக விசா காலாவதி ஆன பலரும் எந்தவிதமான உத்தரவாதங்களும் இல்லாமல் கிடைத்த வேலைகளைச் செய்து வருவர். எதிர்பாராத விதமாக இவர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் பெரும் சிக்கலாகி விடும். இவ்வாறானவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படும்.

எப்படிப் பார்த்தாலும் ஒவ்வொரு ஐந்தாண்டுகள் இடைவெளியிலும் இவ்வாறான இல்லீகல் (சட்டத்துக்கு புறம்பான) தொழிலாளர்களின் எண்ணிக்கை சில பல ஆயிரங்களைத் தொட்டுவிடும். எனவே பெரும்பாலும் ஒவ்வொரு ஐந்தாண்டுகள் இடைவெளியிலும் பொதுமன்னிப்புக் காலங்களை சுமாறாக ஆறுமாதங்கள் வரை நடைமுறைப் படுத்துவார்கள். அவ்வாறான காலங்களில் ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் செயல்படும். குற்றச் செயல்களில் தொடர்பில்லாத அனைவரும் தங்களுடைய பாஸ்போர்ட் விவரங்களை அந்தச் சிறப்பு முகாம்களில் சமர்ப்பித்து கைரேகை அல்லது கருவிழி அடையாளங்களைப் பதிவு செய்தால் சாதாரணமான பயணிகளைப்போல நாட்டைவிட்டு நிரந்தரமாக வெளியேறுவதற்கான ஆவணங்களைத் தயார் செய்து தருவார்கள்.

இதற்குப் பிறகும் நாட்டைவிட்டு வெளியேற ஒன்றிரண்டு மாதகால அவகாசமும் கொடுப்பார்கள். இவ்வாறான காலகட்டங்களைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட
எல்லோருமே வெளியேறி விடுவார்கள். இதுபோன்ற பொதுமன்னிப்பு இல்லாத எல்லாக் காலங்களிலும் விசா சம்பந்தமான சோதனைகள் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும். அப்போதெல்லாம் உரிய ஆவணங்கள் இல்லாதவர்களாக இருந்தால் அவர்களைக் கைதுசெய்து நாடு கடத்துவதற்காக இயங்கும் சிறைகளில் அடைப்பார்கள்.

இதுபோன்றவர்கள் குற்றச் செயல்களில் தேடப்படாதவர்களாக இருந்தால், சுமார் ஒரு மாத காலத்திற்குள் அரசாங்கத்தின் செலவிலேயே அவரவர் நாட்டிற்கு சாதாரணமாக இயக்கப்படும் பயணிகள் விமானத்திலேயே அனுப்பி வைக்கப் படுவார்கள். இப்போதும்கூட அரபுநாடுகளில் இருந்து மும்பை மற்றும் டெல்லி செல்லும் பெரும்பாலான பயணியர் விமானங்களில் எல்லாம் நாடு கடத்தப்படுபவர்கள் ஒருசிலராவது இருப்பார்கள். இவ்வாறானவர்கள் சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கும்போது அவர்களுடைய உடமைகளை அவர்களின் நண்பர்கள் யாரேனும் சிறை அதிகாரிகளிடம் கொண்டுபோய் கொடுத்தால் அவற்றைக் கொண்டுபோவதற்கும் அனுமதிப்பார்கள்.

அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், இந்த அடிப்படை விபரத்தைக் கூட கணக்கில் கொள்ளவில்லையா, அல்லது தெரியவில்லையா என்ற கேள்விகள் ஒருபுறம் எழுகிறது.

சில பல ஆண்டுகளாக தங்கள் நாட்டில் இருந்தவர்களை அவசர கோலத்தில் இராணுவ விமானத்தில் ஏற்றி இறக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அதிரடி என்ற பெயரில் எந்த ஆய்வையும் கைக்கொள்ளாமல் அமெரிக்க அரசு மேற்கொண்ட இந்த மோசமான செயலை இந்திய வெளியுறவுத் துறையின் அமைச்சரே நியாயப்படுத்துவதும், இந்தியாவை ஆளும் பாஜகவின் சாயவாதிகள் அதை தாங்கிப் பிடிப்பதும் முரணுக்கே பிடிபடாத முரண்.

அமெரிக்காவிருந்து 103 இந்தியர்கள் அமெரிக்க இராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதற்குப் பின்னணியில் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்றும் பார்ப்போம்.

முறையான ஆவணங்கள் இல்லாமல் இருப்பவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்துவதற்காக இயங்கும் சிறைகளிலோ அல்லது முகாம்களிலோ அடைத்திருப்பார்கள். அவர்களில் ஒரிஜினல் பாஸ்போர்ட் இல்லாத அனைவருக்கும் இந்திய தூதரகத்தின்மூலம் எமர்ஜென்சி பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருக்கும். பாஸ்போர்ட் விவரங்களின் அடிப்படையில் இவர்கள் அனைவரின் கைரேகை அல்லது கண் கருவிழிப் படலம் பதிவேற்றப்பட்டு அமெரிக்காவின் கருப்பு பட்டியலில் சேர்த்திருப்பார்கள். பயணியர் விமானத்தின் மூலமாக அல்லாமல் சிறப்பு இராணுவ விமானம் மூலம் அனுப்பப்படுவதால் இந்த 103 நபர்களின் முழு விவரங்களும் அமெரிக்காவில் இயங்கும் இந்திய தூதரகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும். அதனடிப்படையில் இந்தியாவின் எந்த விமானநிலையத்தில் அந்த விமானத்தை இறக்குவது என்று முடிவு செய்வதற்காக டெல்லியில் இயங்கும் வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு கோரிக்கை வந்திருக்கும்.
டெல்லி அதிகாரமையம் முடிவெடுத்து இந்தியாவின் பஞ்சாப் அமிர்தசரஸ் விமான நிலையத்தை கை காட்டியிருக்கும். அதன்பிறகுதான்
அந்த விமானம் அமெரிக்காவிலிருந்தே புறப்பட்டிருக்கும்.

இந்த தகவல்கள் எல்லாமே இந்திய வெளியுறவுத் துறைக்கும், இந்திய தூதரகத்திற்கும் தெரிந்துதான் நடந்தாகவேண்டும், வேறு வழியே இல்லை.

மனித உரிமையை மறுக்கும் அத்தனை அநீதிகளும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தபிறகும், இந்திய வெளியுறவுத் துறையோ, இந்தியத் தூதரகமோ இதுபற்றி மூச்சுகூட விடவில்லை. அமெரிக்க அதிகாரி ஒருவர்தான் 204 இந்தியர்களை இராணுவ விமானத்தில் நாடுகடத்தியிருப்பதாக டிவிட்டரில் பதிவு செய்தார். அதன்பிறகுதான் இந்த விஷயமே வெளியில் தெரிந்தது.
அதேபோல், ‘அவர்கள்’ சொல்லியிருந்த 204 என்ற நம்பர் இந்தியாவில் எப்படி 103 ஆனது என்பதற்கும் யாரும் இதுவரை விடைதேடவில்லை.

பஞ்சாப்புக்கு வந்து சேர்ந்த இந்த 103 நபர்களுக்கும் கை கால்களில் விலங்குச் சங்கிலி இட்டது சரியா? என்ற விவாதமே தவறானது. சாதாரணமான பயணிகள் விமானத்தில் இவர்கள் அனுப்பப் பட்டிருந்தால் விமானத்தில் நுழைவதற்கு முன்பாகவே சங்கிலிகளை அவிழ்த்து விடுவார்கள். இவர்கள் வந்ததோ அமெரிக்காவின் இராணுவ விமானம். அந்த விமானத்தில் அதிகபட்சம் நான்கு பைலட்டுகளும் பத்தோ இருபதோ இராணுவ வீரர்களும் மட்டும்தான் இருந்திருப்பார்கள். நாடு கடத்தப்படும் கோபத்திலும் விரக்தியிலும் இருப்பதோ நூற்றுக்கும் மேற்பட்ட இளம் கைதிகள். நமக்கு வேண்டுமானால் இவர்கள் இந்தியர்கள் என்ற பாசம் இருக்கலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரை இவர்கள் அனைவரும் கைதிகளே. இவர்கள் அனைவருக்கும் விலங்கிடாமல் இருந்தால் பறக்கும் விமானத்தின் பைலட் அறைக்குள் புகுந்து விமானத்தையே தகர்க்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஒருவேளை அது இந்தியாவின் விமானமாக இருந்திருந்தால் இந்தச் சீரழிவு நடந்திருக்காது, என்பது மட்டும் நிச்சயம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும், அமெரிக்கர்களின் இந்தியா மீதான மதிப்பும் நாளுக்குநாள் நைந்து கொண்டே போகிறது. இதற்கு இந்திய நாட்டின் ஆட்சியதிகார ‘குவி மைய’ த்து கோமகன்களின் பதில் என்னவாக இருக்கும்?
ஒன்றும் இருக்காது, அமைதியான புன்முறுவல் மட்டுமே மிச்சமிருக்கும்” என்பது திரு. ட்டி. அருள்ராஜ் பார்வை.

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *