சென்னை மணலி மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் உடையார்(40). தனியார் நிறுவன ஊழியர். சிலநாட்கள் முன்னர் மோட்டார் சைக்கிளில் போகும் போது விபத்தில் சிக்கி சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உதவிக்கு அவரது மனைவி செல்வியும் சென்று விட்டதால் வீட்டில் உடையாரின் தாயார் சந்தானலட்சுமி, மகள்கள் சத்யபிரியா (10), ரக்ஷிதா (8), உடையாரின் தங்கை மகள் பவித்ரா (7) ஆகியோர் இருந்து வந்தனர். நேற்றிரவு வழக்கம்போல், ‘மின்சார கொசுவிரட்டி’ யை பயன்படுத்தியபடி தூங்கி உள்ளனர். அப்போது எதிர்பாராது ஏற்பட்ட மின் கசிவால், மின்சார கொசுவிரட்டி கருவி உருகி அருகில் இருந்த அட்டைப்பெட்டி மீது விழவே வீட்டில் தீப்பற்றிக் கொண்டது. புகைமூட்டமும் தீயும் சேர்ந்து கொள்ள மூச்சுத் திணறி உறக்க நிலையிலேயே அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியில் வராததால் எதிர் வீட்டில் வசிக்கும் உடையாரின் தங்கை வேணி, சென்று பார்த்த போது நால்வரும் இறந்து கிடந்துள்ளனர். தகவலின் பேரில் மாதவரம் பால் பண்ணை போலீசார், உடல்களை மீட்டு உடற்கூராய்வு மருத்துவ அறிக்கை பெற, உடல்களை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு சம்பவம் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பொன்.கோ.முத்து