ரயில்களில் போதைப்பொருள்கள் கடத்துவதை தடுக்கும் பொருட்டு, சிறப்பு புலனாய்வு குழுக்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
ஜார்க்கண்ட மாநில, யஷ்வந்த்புர் ரயிலில் (ரயில் எண் -12835) போதைப்பொருள் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சேலம் உட்கோட்ட முதல்நிலை காவலர்கள் சத்தியமூர்த்தி மற்றும் முத்துவேல் ஆகியோர் காட்பாடி ரயில்நிலையம் நடைமேடை எண்- 5ல் ரயில் வந்து நின்றதும் சோதனை நடத்தினர்.
அப்போது ’டிராவலர் பேக்’ குகளில், 24 கிலோ எடைகொண்ட 21 பண்டல் கஞ்சா புகையிலையை மறைத்து வைத்திருந்த இருவர் பிடிபட்டனர். மொத்த கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் பிடிபட்டவர்கள் ராஜேந்திர சாஹூ மற்றும் சுபல்பேக் என்பதும் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. யஷ்வந்த்புர் செல்ல முன்பதிவு செய்து அடுத்தடுத்த இருக்கையான 11, 12 -ல் பயணம் செய்துள்ள தகவலும் வெளியானது. காட்பாடி ரயில்வே போலீசார், தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.
ராஜ்-செல்வா