கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்றிரவு ஏழுமணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. எதிரே வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மோதியது. இதில் பெங்களூரு- ஹவுரா சூப்பர்பாஸ்ட் ரயிலின் 3 முதல் 4 பெட்டிகள் தடம் புரண்டது. இரண்டு பயணிகள் ரயிலுடன், மூன்றாவதாக வந்த சரக்கு ரயில் ஒன்றும்
இவைகளோடு மோதி விபத்தை கடுமையாக்கியுள்ளது. இரண்டு ரயில்களிலும் இருந்து மொத்தம், 17 பெட்டிகள் சரிந்து, எதிரெதிர் தண்டவாளத்தில் விழவே (ஜூன் 6-2023) ஒடிசாவின் பாலசோர் பகுதியே மரண ஓலத்தில் மொத்தமாய் மூழ்கிப் போனது. இதுவரை நிகழ்ந்த ரயில் விபத்துகளில் இதுதான் மிக
மோசமான விபத்து என தெரிவிக்கும் அளவு விபத்தின் கோரம் இருக்கிறது.
தொழில் நுட்பம் டிஜிட்டல் இண்டியா ஒளிரும் இண்டியா என்கிற கம்பிகட்டும்
அத்தனை வார்த்தைகளையும் சாட்சிக்கூண்டில் எதிரே நிற்க வைத்து விட்டது இந்த கொடூர விபத்து.
சிக்னல் இல்லை. சிக்னல் வேலை செய்யவில்லை. ஒரே ட்ராக்கில் இரண்டு ரயில்கள் வருவது துரதிருஷ்டவசமானது. ஒரு ரயில்தான் ட்ராக்கிலிருந்து சரிந்து இன்னொரு ட்ராக் மீது விழுந்தது. அந்த இன்னொரு ட்ராக்கில் எதிர்பாராமல் (?) வந்துவிட்ட இன்னொரு ரயில் மோதிதான் இப்படி ஒரு விபத்து நிகழ்ந்து விட்டது.
‘ஆமாம், சரக்குரயில் எப்படி, மூன்றாவதாக உள்ளே வந்தது,
சரக்கு ரயில் அத்தனை வேகம்பிடித்து வராதே?’ “அதுதானே எங்களுக்கும்
புரியவில்லை”…. நாடகமாய்யா நடக்குது ? விபத்தோ இயற்கைச் சீற்றமோ ஏதோவொன்றில் மொத்தமாய் மனித உயிர்கள் குழி தோண்டி புதைக்கப்படும் போதெல்லாம், விசாரணை கமிஷன், ஆய்வு, குழு என்ற நிலைமைதான் எப்போதுமே என்றால் டெக்னாலஜிகள் ஏன் ?
மொத்தம் 17 பெட்டிகள் தடம்புரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை கேட்கும் காதுகளுக்கும் வலுவில்லை, மனங்களுக்கும் வலுவில்லை ! 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வரும் இன்னொரு தகவல், அதில் இன்னும் எத்தனை பேரின் உயிர்கள், மீட்புப் போராட்டத்தில் இருக்குமோ என்று தெரியாமல் இன்னும் பதை பதைக்கிறது. மீட்பு பணிகள்
தொடர்ந்து வருவதால் பலி எண்ணிகை குறித்த முழுமையான விபரம்
கிடைப்பதற்கு (2023- ஜூன் -3) இன்று நள்ளிரவு ஆகக்கூடும். அப்போது
இன்னும் பதற்றம் அதிகரிக்கும்.
விபத்தில் சிக்கியது, கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் என்பதால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் இந்த ரயிலில் பயணம் செய்திருக்கக் கூடும் என்ற பதற்றமும் தமிழ்நாட்டில் அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது. அடுத்தடுத்த தகவல்களின் அடிப்படையில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 35 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் மொத்தக் கணக்குப்படி தமிழ்நாட்டை சேர்ந்த 127 பேர் ரயிலில் முன்பதிவு செய்து இருந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஜூன் -3 ஆம் தேதி திமுகவின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் ஓரமாய் வைத்துவிட்டு சம்பவ இடத்துக்கு விரையும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுக்கும் மந்திரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைக் கொண்ட குழு உடனே ஒடிசா புறப்பட்டு விட்டது. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப் பட்டுள்ளது : 044 2859 3990, 94458 69843- அதேபோல் ஒடிசா ரயில் விபத்தில்
உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்பொருமுறை கூட அல்ல, பலமுறை இதுபோன்ற / பேரிடர் போன்ற காலகட்டங்களில் அதற்கான கட்டுப்பாட்டு அறைக்கே நேரில் போய், அதிகாரிகளையும் ஊழியர்களையும் விரட்டி விரட்டி நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் செயல்பட்டிருக்கிறார். சோர்வோ தயக்கமோ இறுக்கமோ இல்லாமல் மிக இயல்பாய் இருக்கிறது அவரது செயல்பாடு. குறிப்பாய், இன்று நடந்த பிரஸ்மீட்டில் பேசும்போதும் சரி, வளவளவென ஜால வார்த்தைகள் இல்லாமல், பேச்சு மிகத்தெளிவு. இன்னும் சில நாட்களுக்கு
மீடியாக்கள் பல்வேறு வாத விவாதங்களை இந்த விபத்தின் பின்னணியை முன்வைத்து பேசு பொருளாக்கிக் கொள்வது திண்ணம். விபத்து, தமிழ்நாட்டில் நடக்க வில்லையே என்பது(ம்) பலரது உளக்கிடக்கையின் பேசாபொருள்!உடனுக்குடன் உதவித்தொகை அறிவிப்பு, விபத்தில் சிக்கியவருக்கு தரமான சிகிச்சை, கதறிக் கொண்டு ஆலாய்ப் பறக்கும் உறவுகளை அரவணைத்து விபத்து சிகிச்சை குறித்த தகவல் பரிமாற்றம், விபத்து நடந்த மாநில மொழி ஐஏஎஸ் அதிகாரியையே அங்கு அனுப்பி வைத்தது போன்ற டைமிங் செயல்பாடுகள் பிரமிப்பு ரகம். அபாயகரமான – உயிர்காக்கும் அவசர காலகட்டங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேகத்தையும் – செயல்பாட்டையும் பாராட்டியே ஆகவேண்டும் !
என்னது நீங்க பாராட்ட மாட்டீங்களா…
உங்களைச் சொல்லலே அன்பர்களே !
நான் பாராட்டிக்கறேன்…
ந.பா.சேதுராமன்