மூணு லாரி, 105 டன் இரும்பு… ரூ. 1.25 கோடி சுருட்டிய கும்பல்!

மூன்று லாரிகளில் ஒன்னேகால் கோடி ரூபாய் மதிப்பிலான 105 டன் இரும்பு காயில்களை பாதுகாப்பு பணியில் இருந்த தங்கங்களே திருடிய சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் சிப்காட்டில் தனியார் நிறுவன கிடங்கில் ரூபாய் 1 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள 105 டன் இரும்பு காயில்கள் வைக்கப்பட்டு இருந்தது. அந்த காயில்களைத்தான் சம்மந்தப்பட்ட நிறுவனமும் புகாரை வாங்கிய போலீசும் தேடிக் கொண்டிருக்கிறது. காயல்களை பாதுகாப்பாக (?) வைத்திருந்த அதே நிறுவன செக்யூரிட்டி (?) வெங்கடேசன். வெங்கடேசனின் கூட்டாளி குமரேசன். கடந்த 5ஆம் தேதி அதிகாலை மூன்று மணியளவில் மூன்று கனரக ட்ரெய்லர் லாரிகளில் எடை மேடை ஆப்ரேட்டர் தேவராஜ், பில்லிங் சூப்பர்வைசர் அஜித் கூட்டணி, கணினியில் போலி பில் தயார் செய்து திருட்டுக்கு முதல் கதவை திறந்துள்ளது. கிரேன் ஆப்ரேட்டர் எல்லப்பன், டன் கணக்கில் காயல்களை திருடிப் போகும் கூட்டுச் சதி திட்டத்துக்கு இன்னொரு கூட்டாளி. அடுத்த நாள் கம்பெனியை திறந்த நிர்வாகம், டன் கணக்கில் காயில்களை காணவில்லை என்று பதறுவதற்குள் நிர்வாகத்துக்கு மொத்த கதையும் போய்ச் சேர்ந்து விட்டது. நேர்மையான சில செக்யூரிட்டிகள் அனைத்தையும் போட்டு உடைக்கவே ஒரகடம் போலீசில் புகார் பதிவானது. தனிப்படை போலீசாரின் தீவிர வேட்டையில் கண்ணன் தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த எடை மேடை ஆப்ரேட்டர் தேவராஜ், வாலாஜாபாத்தை சேர்ந்த செக்யூரிட்டி குமரேசன், காஞ்சி மாவட்டம், சிறு காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பில்லிங் சூப்பர்வைசர் அஜித், மாத்தூரை சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் எல்லப்பன், சென்னை வண்ணாரப்பேட்டை பரசுராமன், சிவக்குமார், தில்லி குமார் ஆகியோர் இந்த விவகாரத்தில் போலீசில் சிக்கினர், கைது ஆகினர், சிறையிலும் அடைக்கப் பட்டுள்ளனர். வெங்கடேசன் உள்ளிட்ட சில முக்கிய குற்றவாளிகளை தேடி வருவதாக போலீஸ் தரப்பில் சொல்லப் பட்டுள்ளது. மூணு லாரி வைத்து கொண்டு போகப்பட்ட ஒன்னே கால் கோடி ரூபாய் மதிப்பு இரும்பு காயல்கள்தான் புகார் கொடுத்தவர்களுக்கு இன்னும் திரும்பக் கிடைக்கவில்லை…

-பாலகுமாரன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *