இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ, எள்ளல் தன்மையுடன் பகிரப்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ‘அரிசி’ குறித்து புகார் சொல்லும் ஒரு பெண்ணின் யதார்த்த பேச்சைத்தான் அப்படி பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருப்பெரும்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வருகிறது, செங்காடு கிராம ஊராட்சி. அந்த ஊராட்சியின் சிறப்பு கிராம சபைக் கூட்டம், கடந்த 24-ஆம் தேதி நடந்தது. முதலமைச்சர் பொறுப்புக்கு வருவதற்கு முன்னால், ‘நமக்கு நாமே மற்றும் கிராம சபை’ கூட்டங்களை முன்னின்று நடத்தியவர், முதலமைச்சரான பின்னாலும் அதேபோல் தலைமையேற்று நடத்திய கிராம சபைக் கூட்டம்தான் செங்காடு கிராம ஊராட்சியில் நடந்த கூட்டம் !
கூட்டத்தோடு கூட்டமாக நாமும், நமது சகாக்கள், மாறன் மற்றும் பிரீத்தி எஸ். உள்ளிட்ட சிலரும் அந்த நிகழ்வின்போது அங்கிருந்ததால் இதை எழுத வேண்டி வந்தது.
முதலமைச்சரிடம் அந்தப்பெண் (கள்) பேசியதுதான் என்ன ?
செங்காடு கிராம ஊராட்சி மக்களின் வாழ்விட பூமி, ஆரம்பிக்கும் இடத்திலேயே காரை விட்டு இறங்கிவிட்ட முதலமைச்சர், அங்குள்ள மக்களை நோக்கி நடக்க ஆரம்பித்தார். பாதுகாப்பு அதிகாரிகள் சற்றே விலகி நின்றனர். ஒவ்வொரு தாய் மார்களிடமும், ‘என்ன பிரச்சினை இப்ப, எல்லாம் நிறைவேறிட்டு வருதா, இல்லே எதாவது குறை இருக்கா’ ? என்றார். “யார்கிட்ட சொல்றது, எவ்ளோவ் குறைங்க இருக்கே” என்றார், கையில் குழந்தையை வைத்திருந்த ஒரு பெண். ‘குறைய என் கிட்டதான் சொல்லணும், நான் தான் கிராமசபைக் கூட்டம் நடத்தும் போதே சொல்லிட்டுப் போனேனில்ல, என் கிட்ட உங்ககுறைய சொல்றதுல என்ன தயக்கம்?’ என்றார் முதலமைச்சர்.
அப்போது இன்னொரு பெண், “ரேசன் கடைல போடற அரிசி கலர் கலரா இருக்கு, கேட்டா அப்படித்தான் இருக்கும், யார்கிட்ட போய் சொல்றியோ போய் சொல்லிக்கோன்னு கடைக்காரர் சொல்றாரு” என்றார். முதலமைச்சர் திரும்பிப் பார்த்ததும், “அய்யா நம்ம செங்காடு ஊராட்சில இருக்குற ரேசன்கடைதான்… இப்பவே என்னன்ன்னு பார்த்துடறோம்” என்று பக்கத்தில் இருந்து ரிப்ளை வந்தது. மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியும் ரேசன்கடை விவகாரத்தைக் குறித்துக் கொண்டார். நாட்டின் முதலமைச்சரிடம் பேசுகிறோமே என்கிற எந்த பதற்றமும் இல்லாமல், கிராம நிர்வாக அலுவலரிடம் (அவரிடம் கூட இவ்வளவு துணிவாக ஒரு புகாரைப் போய்ச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை) பேசுவது போல் மிக சாதாரணமாக செங்காடு கிராம ஊராட்சி மக்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இயல்பாய் பேசிக் கொண்டிருந்ததுதான் இப்படி வீடியோவாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இன்னொரு பெண், வேகவேகமாக முதலமைச்சரை நோக்கி வந்தார், அதிகாரிகள் அவரைத் தடுக்கவில்லை. “இங்கே வெளிக்குப் போறது (டாய்லெட்) எவ்ள கஷ்டமா இருக்குது தெரியுமா?” என்று கேட்டு விட்டு, அதே வேகத்தில் அங்கிருந்து போக முயன்றார். முதலமைச்சர் அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு, “உங்க பிரச்சினைக்கு தனியா நிதி ஒதுக்கி உடனே அதை சரி பண்ணுறேன், சாலை வசதில்லாம் நல்லா இருக்கா?” என்றார். “ ‘அது என்னாத்துக்கு, ரோடே நல்லால்லியே’ என்றார் அந்தப் பெண்.
இப்படி பலகேள்விகள், பல பதில்கள். பலர், முதலமைச்சரை இடித்துக் கொண்டும், தள்ளி விட்டபடியும் தங்கள் குறைகளை சொல்லிக் கொண்டே இருந்தார்கள்… அனைத்துக்கும் பதிலை மேடையில் அறிவிப்பாகவே சொன்னார், முதலமைச்சர்.
செங்காடு கிராம ஊராட்சி மக்களின் முன்பாக முதலமைச்சர் பேசக்கூடிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. நாற்காலி இல்லை. திண்ணைதான்.
அந்த மேடைத் திண்ணையில்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, தொகுதி எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, ஊராட்சி மன்றத் தலைவர் செஞ்சுராணி கவாஸ்கர் (அதிமுக) ஆகியோர் அமர்ந்திருந்தனர். துறை ஐஏஎஸ் அமுதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், மேடைக்கு முன்புறமாக ஊடகத்தினரோடு அமர்ந்திருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்ணைப்பேச்சு இதுதான்…
”செங்காடு ஊர் பொதுமக்களிடத்தில் குறைகளைக் கேட்டு அதைச் சரி செய்ய வேண்டும், நிவர்த்தி செய்திட வேண்டும் என்கிற உணர்வோடு இந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கக்கூடிய உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை, பாராட்டுகளை, நன்றியை நான் தெரி வித்துக் கொள்ள விரும்புகிறேன்.
உங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினைகள் பற்றி சொன் னீர்கள், அதே போல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இருக்கக் கூடிய இடையூறுகளைப் பற்றிச் சொன் னீர்கள், நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயர்த் தித் தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறீர்கள், இப்படி கோரிக் கைகள் பல இருக்கின் றன. இதையெல்லாம் நாங்கள் இன் றைக்கு கவனமாக குறித்து வைத்துக் கொண்டு, நிச்சயமாக, உறுதியாக அதை யெல்லாம் மிகமிக விரைவில், அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றித் தருவதற்குக் காத்திருக் கிறோம்.
அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ், செங்காடு கிராமத்தில் ரூ.12 இலட்சத்து 11 ஆயிரம் செலவில் மதுரைவீரன் கோயில்குளம் புனரமைக்கப்படும்..
அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ், கண்ட மங்கலம் கிராமத்தில் மாத்தம்மன் கோயில் தெரு, செங்காடு கிராமத்தில் செங்காடு குறுக்குத் தெரு, மதுரை வீரன் கோயில் தெரு மற்றும் கண்ட மங்கலம் பிரதான தெருக்களுக்கு ரூ.9 இலட்சத்து 40 ஆயிரம் செலவில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்படும்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ரூ.5 இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் பெண் குழந்தை களுக்கான கழிவறை கட்டித் தரப்படும். செங்காடு கிராமத்தில் இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கழி கால்வாய் அமைக்கப்படும். ஆதிதிராவிடர் குக்கிராம மேம்பட திட்டத்தின் கீழ், செங்காடு கிராமத்து பெருமாள் கோயில் மற்றும் மாரியம்மன் கோயில் தெருக்களுக்கு ரூ.14 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்படும். பதினைந்தாவது நிதிக்குழு மானிய நிதியில், செங்காடு கிராமத்தில் ரூ.23 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படும்.
இப்பொழுது நான் அறிவித்துள்ள திட்டங்கள் மட்டுமன்றி இன்னும் அரசின் வேறு நலத்திட்டங்கள் கிராம அளவில் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பது தான் இந்த அரசுடைய குறிக்கோளாக இருக்கிறது. செங்காடு ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட பணிகள் நடந்து முடிந்திருக்கிறதா என்பதை, அதிகாரிகளிடத்தில் தொலை பேசியிலோ அல்லது கடிதம் மூலமாக கேட்டு மட்டும் அல்ல, நேரடியாக அடுத்த முறை நானே வந்து பார்ப்பேன் என்ற உறுதி மொழியையும் இந்தநேரத்தில் எடுத்துச் சொல்லி, அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பும், உங்களுடைய ஆதரவும் தொடர்ந்து அரசுக்கு இருக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறேன்… ”
முதலமைச்சர் ஸ்டாலின் பேசி முடித்ததும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு நாமும் அங்கிருந்து புறப்பட்டு விட்டோம்.
ந.பா.சே.
– பிரீத்தி எஸ்.