வருவாய் கோட்டாட்சியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் புதிய கோட்டாட்சியர் பொறுப்பு ஏற்காததால் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்காக வந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படும் நிலைமை பொன்னேரியில் உருவாகியுள்ளது. அதன் பின்னணித் தகவலோ இன்னும் அதிரவைக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டத்தின் கீழ் 200- க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள், வீட்டு மனைப் பட்டா, பட்டா பெயர் மாற்றம், சாதிச்சான்றிதழ், நில அளவீடு உள்ளிட்ட வருவாய்ப் பணிகளுக்காக பொன்னேரியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை தான் அணுக வேண்டும். இந்நிலையில் அங்கு வருவாய் கோட்டாட்சியர் பணியில் இருந்து வந்த செல்வம் என்பவர் மீது முறைகேடு புகார் எழுந்ததால் கடந்த 3 மாதத்திற்கு முன்பு துறை ரீதியான நடவடிக்கையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, பொன்னேரி கோட்டாட்சியர் பணிக்கு நியமிக்கப்பட்டார். அதே வேளையில் புதிய கோட்டாட்சியர் காயத்ரி, கோட்டாட்சியர் பொறுப்பு ஏற்காமல் இருந்ததால் நிர்வாகச் சிக்கல் ஏற்பட்டது. நிர்வாகச் சிக்கலை சரிசெய்ய டாஸ்மாக் நிர்வாக அலுவலரான பரமேஸ்வரி என்பவரை வருவாய் கோட்டாட்சியராக கூடுதல் பொறுப்பேற்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. புதிய பொறுப்பு கோட்டாட்சியர் (பொறுப்பு) பரமேஸ்வரியும் ஒருமுறை கூட கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வராததால், பொதுமக்கள் அளித்த மனுக்கள் தொடர்பான கோப்புகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் ஆக இருந்த செல்வம், அமைச்சர் ஒருவருக்கு வேண்டியவர் என்று கூறப்படுவதால் மீண்டும் அவரையே இங்கு நியமனம் செய்ய மறைமுக வேலைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. புதிய கோட்டாட்சியர் காயத்ரியை பொறுப்பு ஏற்க விடாமல் அதிகாரத்தில் இருப்பவர்கள் தடுப்பதாகவும், இன்னொரு குற்றச்சாட்டும் வலுத்து வருகிறது. மொத்தத்தில் பொன்னேரி கோட்டாட்சியர் யார் என்ற கேள்விக்குத்தான் இதுவரை பதில் கிடைக்கவில்லை…
-தேனீஸ்வரன் –