ரூ.45 கோடி மோசடி புகார்! தனியார் பால் நிறுவன மேலாளர் விபரீத முடிவு…

சென்னையில் தனியார் பால் நிறுவனத்தில் 45 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் காவல் துறையினரின் விசாரணைக்கு பயந்து அதிகாரி தூக்கிட்டு தற்கொ*லை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ரெட்டேரி பகுதியில் திருமலா என்ற பிரபல தனியார் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த நவீன் பொல்லினேனி என்பவர் கடந்த மூன்று வருடங்களாக கருவூல மேலாளராக பணிபுரிந்து வந்தார், அண்மையில் திருமலா பால் நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் சரிபார்க்கப்பட்ட போது சுமார் 45 கோடி ரூபாய் வரை மேலாளர் நவீன் பொல்லினேனி மோசடி செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, 5 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தந்ததாகவும், மோசடி செய்த எஞ்சிய பணத்தை விரைவில் திருப்பி தந்து விடுவதாகவும் நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார்.
அதை ஏற்க மறுத்த சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரி இதுகுறித்து கொளத்தூர் காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளித்தார். அந்த புகாரை மாதவரம் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில்தான் காவல்துறையினர் தன்னை கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் நவீன் பொல்லினேனி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது சகோதரி மற்றும் திருமலா பால் நிறுவன அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து மாதவரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை எடுத்து அவரை காவல்துறையினர் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். இந்நிலையில் புழல் பகுதியில் வீடு கட்டுவதற்காக தான் வாங்கிய இடத்தில் அமைத்திருந்த தற்காலிக குடிசையில் தூக்கிட்டு தற்கொ*லை செய்து கொண்டார். தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த புழல் காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண மோசடி வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் திருமலா பால் நிறுவன மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

P.K.M.

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *