ராஜஸ்தான் மாநில போலீசாரின் ‘பனிஷ்மெண்ட்’ களில் பல் பிடுங்கல், விதைப்பை நசுக்கல் போன்றவை சாதாரணமாய் இடம் பெற்றிருக்கும் என்கிறார்கள். இதையும் இங்கே கணக்கில் கொள்ளலாம்.
நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரத்தில் பணியாற்றிய ஏ.எஸ்.பி. (பயிற்சி ஐ.பி.எஸ்.) பல்வீர்சிங்கின் ரத்த உறவுகள் பலர், ராஜஸ்தான் மாநில போலீசில் இருக்கிறார்கள். பல சம்பவங்களை பல்வீர்சிங்
அப்போது நேரடியாகப் பார்த்திருக்கக் கூடும் அல்லது கேட்டிருக்கக் கூடும். ஆழ்மனதில் பதிகிற சில விஷயங்களை எந்த சோப்பு போட்டாலும் மொத்தமாய் கழுவித் தீர்த்து விடமுடியாதே.
பல்வீர்சிங் போல பலர், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தமிழ்நாடு ‘கேடர்’ ஐபிஎஸ் அதிகாரிகளாகி போலீஸ் டிஜிபி (1) வரை உயர்ந்திருக்கிறார்கள்- மறுப்பதற்கில்லை.
யார் யார் எதை எதை உள் வாங்கிக் கொண்டனர், எவ்வளவு தூரம் தன் உளவியலும், பிறர் உளவியலும்
(உன்னையே நீ அறிவாய்) பகுத்து தெளிந்தனர் என்ற அளவீடே
இதில் முதலீடு !
மருத்துவம் முடித்து விட்டு ஐ.பி.எஸ். தேர்வு எழுதி, வேலைக்குப் போன பின்னும் ஐஏஎஸ் தேர்வுகளுக்கு தம்மை தயார்ப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு படிப்பாளியாக இருந்துள்ள ஒரு மனிதன், விசாரணைக் கைதிகளின் பற்களை, விதைப்பைகளை பாழாக்கும் அளவுக்கு போக மனம் ஒப்புமா என்ற கேள்வியும் ஒருபக்கம் இருக்கிறது.
எல்லாக் கேள்விக்கும் மறுநாளே அதுவும் போலீசே பதிலையும்
கொடுத்து விட்டது. விதை நசுங்கியவன், பற்களைப் பறி கொடுத்தவன், அவர்களைப் பெற்றவன், உறவினன், நண்பன், எட்ட நின்றவன், சம்பவத்தை எட்டி நின்று வேடிக்கைப் பார்த்தவன் அத்தனை பேரும் மொத்தமாய் கூடி , ‘ஏஎஸ்பி பல்வீர்சிங் அய்யா இந்த ஊருக்கு வந்த பிறகுதான் நாங்கள் நிம்மதியாக தூங்குகிறோம், சாப்பிடுகிறோம், பேசுகிறோம்’ என்று பேசிய வீடியோ தொகுப்புகள் வெளியாகி எனக்கு விடையாகவும் ஆகிப்போனது.
ஏதோ இரண்டொரு கழித்து வீடியோவை விட்டிருந்தால் கூட கொஞ்சம் மனசுக்கு சமாதானமாகி இருக்கும். அதுவும் வீடியோ ரிலீசுக்கு முன்பாக ஊரில் பல்வீர்சிங் சாதனைகளை சொல்லும் பேனர்களை மூலைக்குமூலை கட்டி வைத்து விட்டார்கள்…
பல்வீர்சிங் மட்டுமல்லாது கான்ஸ்டபிள், ஏட்டு, எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் வரை ஒன்றன்பின் ஒன்றாக பல் உடைப்பு, விதைப்பை நசிப்பு விவகாரத்தில் இப்போது வந்திருக்கிறார்கள். கீழே இருப்பவர்கள் தவறு செய்தால் மேலே இருப்பவர்கள் கண்டிப்பார்கள், அதுதான் நடைமுறை. இங்கே, மேலே இருப்பவர் மீதுதான் முதலில் புகாரே வருகிறது, அதைத் தொடர்ந்தே கீழே இருப்பவர்கள் சிக்குகிறார்கள். எல்லாமே தலைகீழாய் கிடக்கிறதே!
நம்ம ஊரில் கி.பி. 2000-க்கு முன்னர் வரை ‘பஞ்சாப் கட்டு’ என்ற முறையை போலீசார் பயன்படுத்தி வந்தனர். பஞ்சாப்கட்டு ‘கட்ட’ தெரியாத ‘கட்ட’ துரைகளை போலீசாகவே டிபார்ட்மெண்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அது ஒரு கொடூரமான மெத்தேட். உள் காயம் வெளிகாயம் என ஒன்றுமே தெரியாது. எக்ஸ்ரேவிலும் காட்டாது. சந்தைக்கு அறிமுகமான ஆர்பிஜி செல்லுலார் போன் போல எங்கோ ஓரிடத்தில் ஸ்கேன் சென்டர் கிடந்ததால், அவ்வளவு தூரம் பாதிக்கப்பட்ட தரப்பு மெனக்கெட்டு ஸ்கேனாக வில்லை. வொய்ட் காலர் அக்யூஸ்டுகளை யாரும் பஞ்சாப்கட்டு கட்டாததால் அந்தக் கட்டு பொது வெளியில் விவாதிக்கப்படும் அளவு, மார்க்கெட் இல்லாமல் போனது.
தாதாக்களிலேயே சில பணக்கார தாதாக்கள் போலீசில் சிக்கிய போது யாரோ ஒரு அறிமுக லா அன்ட் ஆர்டர் காக்கி, பணக்கார தாதாவுக்கு பஞ்சாப்கட்டு போட்டு வைக்க, அந்த தாதா ஸ்கேன் வரை போய் நரம்புகள் கொஞ்சங் கொஞ்சமாய் செத்துப்போய் நடமாட்டமே ஆறேழு மாதம்தான் என்ற ரிப்போர்ட்டை வாங்கி விட்டார்.
அதன் பின்னர் பஞ்சாப்கட்டு எக்ஸ்பர்ட்டுகள் சுதாரித்துக் கொண்டனர். நாளடைவில் அது வேறு வடிவத்துக்கு மாறியது. ‘ஆள், கஸ்டடியில் இருந்து தப்பித்து ஓடும்போது வழுக்கி இடறி உடைத்துக் கொண்டான்’ என்று ஆண்டில் ஆறேழு மாதங்களுக்கு கால்களையும் அடுத்த ஆறேழு மாதங்களுக்கு கைகளையும் காட்டிக் கொண்டிருந்தனர். மொத்தத்தில் ஏதாவதொரு உறுப்பு ஊனப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் டார்கெட் என்று சம்பவங்கள்தான் சொல்கிறதே
தவிர நான் சொல்லவில்லை.
இப்போது புதிய அத்தியாயத்தை பல்வீர்சிங் என்ற ஐபிஎஸ்
உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.
காவல்துறையினர் ஏதாவது வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டால், பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதியும் முதுமைகால சாவும் ஏறக்குறைய நாள் கணக்கில்தான் முன்பின் வந்து சேரும். எழுதப்படாத விதி இது. போலீசுக்கு எதிராக சாட்சி சொல்ல ஆளே வராத அளவுக்கு அதீத பயம், அப்பாவி பொதுமக்கள் மனதில் பதிந்து கிடப்பதே அதற்குக் காரணம்.
முதல் வார்த்தையே, ‘டேய் இங்க என்னடா பண்றே?’ என்றுதானே வருகிறது!
‘எதுவா இருந்தாலும் ஸ்டேசனுக்குப் போய் பேசிக்கலாம், ஜீப்பை எடுங்க சார்’ என்கிற அசாத்திய மனநிலைக்கு இயல்பாய் எப்போது பாமரன் வருகிறானோ அந்தநாள்தான் ஜனநாயகத்துக்கு விடிவுகாலம்.
பாதிக்கப்பட்டவர் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்றாலும், பாதிப்பை உண்டாக்கியவர் ஆண் ஐபிஎஸ் எனும் போது அந்தப்பெண் ஐபிஎஸ்சுக்கான நீதி எளிதில் கிடைத்து விடுகிறதா என்ன? தனக்கே நீதியை பெற முடியாத அந்த பெண் ஐ.பி.எஸ்., வெகுஜன சமூகத்துக்கு முன்னே நின்று, ‘உங்களை நான் காப்பாற்றுகிறேன்’ என்ற வாக்குறுதியை திட மனதுடன் கொடுக்கத்தான் முடியுமா?
UPSC யை படித்து முடிக்க ஒரு தனி மனிதன் தன்னைத்தானே மெழுகாய் உருக்கிக் கொண்டால் மட்டுமே சாத்தியம் என்ற நினைப்பு வரும்போது பயிற்சி ஐபிஎஸ் பல்வீர்சிங் மீது பரிதாப உணர்வு ஏற்படுகிறது. மெத்தப்படித்தும் மொத்தமாய் அதை மறந்து தொலைத்திருப்பதை நினைக்கும் போது வேதனையும் வெறுப்புமே மிஞ்சுகிறது.
ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்ளிட்ட பல போலீசார் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது சற்றே ஆறுதலான விஷயம். பல்வீர்சிங், காத்திருப்போர் பட்டியலிலும் வைக்கப் பட்டிருக்கிறார். முதலில் அவர்மீதும், சம்மந்தப்பட்ட போலீசார் மீதும் கொலை முயற்சி வழக்கைதான் பதிவு செய்திருக்க வேண்டும் – பரவாயில்லை, இப்போதுகூட அதை செய்யலாம்.
ஆட்சி பீடத்தில் யார் இருந்தாலும் போலீஸ் மீதான குற்றச்சாட்டுகளின் போது காக்கும் கரங்களை நீட்டுவதும் எழுதப்படாத விதியாகவே ஆகிப் போயிருக்கிறது.
இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களில் இருக்கிறது
என்றார் மகாத்மா காந்தி.
இங்கே ஆட்சியாளர்களின் முதுகெலும்பு போலீஸ் போலிருக்கிறது… ந.பா.சேதுராமன்