மூன்று பிள்ளைகளை கொன்ற குடிகாரன்!

குடிகார அப்பனின் கொடுமையை தாங்க முடியாமல் மகள் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையே இன்னும் முடியவில்லை… அதற்குள் – அடுத்து இரண்டு பெண் பிள்ளைகளை அடித்தே கொலை செய்துள்ளான், அந்த கொடூரமனம் கொண்ட குடிகார அப்பன்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் அடுத்த சின்ன மதுரைப்பாக்கம் மாரியம்மன் கோவில் பகுதிவாசி கோவிந்தராஜ். கூலித் தொழிலாளி. மனைவி நான்கு பிள்ளைகள். பேக்கரிகளில் ஸ்வீட் தயாரித்துக் கொடுக்கும் மாஸ்டர் கோவிந்தராஜூக்கு சொந்த வாழ்க்கை மட்டும் இனிக்காமல் போனது. காரணம், கோவிந்தராஜூக்கு டாஸ்மாக் கடை வாசலே கோயில் வாசற்கசவு போல் ஆனதுதான். மூன்று பெண் பிள்ளைகள், ஒரு ஆண் பிள்ளையை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்த வருமானம் இல்லாமல், தவித்த கோவிந்தராஜின் மனைவி கீதா, ஊத்துக்காடு பகுதியில் ஒரு தொழிற்சாலை வேலைக்குப் போய் பிள்ளைகளை காப்பாற்றி வந்தார். இந்நிலையில்தான் கடந்த (ஏப்ரல் -2022) மாதம், இரண்டாவது மகள் நதியா (16) தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கோவிந்தராஜின் எல்லை மீறிய துன்புறுத்தல் தான் நதியாவின் தற்கொலைக்கு காரணம் என்று ஒரகடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு அதன்மீது விசாரணை நடந்து வருகிறது. ஸ்வீட் மாஸ்டர் வேலைக்கு ஊரில் டிமாண்ட் இருந்தும் வேலைக்கே போகாமல் குடித்து விட்டு குடும்ப வன்முறையில் ஈடுபடுவதை மட்டுமே வேலையாக வைத்திருந்துள்ளார் கோவிந்தராஜ்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் 20-ஆம் தேதி காலை வழக்கம் போல கீதா வேலைக்குப் போய்விட பிளஸ் ஒன் தேர்வுக்காக நந்தினி படிப்பில் தீவிரமாய் இருந்திருக்கிறார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் இன்னொரு மகள் தீபாவும் வீட்டில் படித்துக் கொண்டு இருந்துள்ளார். நண்கல் 12 மணியளவில் அப்போது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார் கோவிந்தராஜ். “இந்த மது பாட்டிலை உடைத்து விட்டால் இனிமேல் மது குடிப்பீர்களா?” என்றபடி மதுபாட்டிலை நந்தினி உடைத்து விட்டதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். குடிவெறி தலைக்கு ஏறிப்போய் விட்ட ஒருவனுக்கு பிள்ளைகளோ மனைவியோ பெற்றவர்களோ கண்ணுக்குத் தெரிய வாய்ப்பே இல்லையே! மே- 20 -2022 -ஆம் தேதி நண்பகல் அதுதான் அங்கே நடந்துள்ளது. மது பாட்டிலை உடைத்த மகள் நந்தினியை உருட்டுக் கட்டையால் தாக்கிய கோவிந்தராஜ், தடுக்க முயன்ற இன்னொரு மகளான தீபாவையும் விட்டு வைக்கவில்லை, அவரையும் தாக்கத் தொடங்கியிருக்கிறார். எல்லாம் சில நிமிட நேரம்தான். மகள்கள் இருவரும் அதே இடத்தில் இறந்து போயுள்ளனர். அக்கம் பக்கத்து ஆட்கள் கோவிந்தராஜை விரட்டவே ஊராரின் அடி உதையிலிருந்து தப்பிக்க ஒரகடம் போலீசில் சரணடைந்துள்ளார். டாஸ்மாக் போதை உச்சத்தில் இரண்டு பிள்ளைகளை கொலை செய்தும் ஒரு பிள்ளை தற்கொலைக்கு காரணமாக இருந்தும் ஒரு மனித உருவிலான மிருகத்துக்கு சட்டம் கொடுக்கப் போகும் தண்டனை மரண தண்டனையாகக் கூட இருந்து விட்டுப் போகட்டும்… இது போன்ற கொடூரன்களை மனதளவிலாவது மாற்றி விட சமூக அமைப்புகளாலும், சட்டத்தாலும் முடியுமென்றால் பெற்றவனால் பிள்ளைகள் சாகாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது! சிவ.சுப்ரமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *