பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிட தமிழ்நாடு காவல்துறை சார்பில் 1.40 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிதித் தொகையை காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சி. சைலேந்திரபாபு வழங்கினார். தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுகிற 37 மாவட்ட (ம) ஒன்பது மாநகர காவலர்கள் சார்பாக, 1,34,19,643 – ரூபாயும் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில், 6,63,500 -ரூபாயும் (மொத்தம் ரூ. 1,40,83,143-) முதலமைச்சரிடம் தலைமைச் செயலகத்தில் காசோலையாக வழங்கப்பட்டது.
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அ. அமல்ராஜ் மற்றும் சிபிசிஐடி போலீஸ் டிஜிபி முகம்மது ஷக்கீல் அக்தர் ஆகியோர் நிகழ்வின் போது உடனிருந்தனர்.
இலங்கை மக்களின் நலவாழ்வுக்கு இந்திய அரசு பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. டீசல், பெட்ரோல், உணவுப்பொருள் மட்டுமல்லாமல் பல முறை கோடிகளில் பண உதவியையும் செய்துள்ளது. இந்தியா இப்படி பல்வேறு உதவிகளை செய்து வந்தாலும் ‘எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள்’ என்று சொல்லி தமிழ்நாட்டு மீனவர்களை மாதத்தில் ஒருமுறையாவது மறக்காமல் கைது செய்கிறது இலங்கையின் கடலோரக் காவல்படை. போதாதென்று இலங்கை நாட்டின் மீனவர்களும் இந்திய (தமிழ்நாட்டு) மீனவர்களை பணயக்கைதியாக சிறைபிடித்து வைத்துக் கொள்வதும் அவ்வப்போது நடந்து கொண்டேதான் இருக்கிறது. இலங்கை மக்களுக்காக இந்தியாவும் தமிழ்நாடும் எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது… அதே கவலை, இலங்கைக்கும் அல்லவா இருக்க வேண்டும்!
பிரீத்தி எஸ் – ந.பா.சே