வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த பெரிய பாலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவரது கணவர் முன்னாள் ராணுவ வீரர் வசந்த்குமார் இறந்து விட்டார். ஒரே மகன் தாமு (எ) தாமோதரன் (14) மட்டுமே கீதாவின் துணையாக இருந்துள்ளார்.
தாமோதரன் 9-வகுப்பு மாணவன். எந்த நேரமும் செல்போன் மூலம் பிரீ பையர், மற்றும் பல கேம்களை விளையாடி வந்ததாக தெரிகிறது.
ஒரே மகன், செல்ல மகன் என்பதால் மகன் கேட்ட செல்போனை தாயார் கீதா வாங்கிகொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான் தாமு. தாயார் கீதா, “போன் நோண்டியது போதும் தூங்குப்பா’ என கூறியுள்ளார். “அம்மா நீ தூங்கு நான் பிறகு தூங்குகிறேன்” என்றிருக்கிறான் தாமு. கீதா தூங்கிய பிறகு, மொட்டை மாடிக்கு சென்று கேம் விளையாடி உள்ளான் தாமு.
நீண்டநேரம் ஆகியும் மகன் வரவில்லை, மழை பொழிவும் இருக்கவே தாய் கீதா, மொட்டை மாடிக்குப் போய் பார்க்க அங்கு பிளேடால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தாமு உயிரிழந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் தாலுகா போலீசார், மாணவனின் உடலை மீட்டு உடற்கூராய்வு அறிக்கை பெற வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு மரணம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மாணவன் தாமு பொதுவாக யாரிடமும் பேசாமலும், பழகாமலும் பெரும்பாலான நேரம் தனிமையில் இருந்ததாகவும் 6 மாதங்களாக அடிக்கடி கேம் விளையாடி வந்ததாகவும், மேலும் சம்பவத்தன்று இரவு கேம் விளையாடும் போது ரீசார்ஜ் முடிந்ததால் ‘கேம்’ தொடர்ந்து விளையாட முடியாத நிலையால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர் போலீசார். தாமுவின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்த போது செல்போன் முழுக்க கேம் இருந்ததாக கூறப்படுகிறது.அதே சமயம்
நன்றாக படிக்கக் கூடியவராகவும் இருந்துள்ளார் தாமு.
வேள்பாரி