சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, வேலை வாய்ப்பு மோசடி மற்றும் ஆவணங்கள் மோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 9 பேரை குண்டர் தடுப்புக் காவல் (குண்டாஸ் ஆக்ட்) சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நடப்பு 2022- ம் ஆண்டில் நூறு நாட்களில் மட்டும் சென்னையில் 60 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டுகாலம் சிறையில் அடைத்துள்ளதாக பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு. சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள். போதைப்பொருள் கடத்துபவர்கள். கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு. மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் என பல்வேறு குற்றச்செயல் புரிவோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்
அயனாவரம் செல்வம் (எ) அப்பளத்தை வழிப்பறி வழக்கில் திருவல்லிக்கேணி போலீசாரும், வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பண மோசடி செய்த குற்றத்திற்காக பள்ளிக்கரணை ரேணுகாவை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செல்வம் (எ) அப்பளம் மற்றும் ரேணுகா ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டனர். அதேபோல் சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்த இமான் (எ) அரவிந்த், கொலை – கொலை முயற்சி வழக்குப் பின்னணி காரணமாக குண்டாஸில் அடைக்கப்பட்டார். அதேபோல் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஜலாலுதீன்கான், ஹைதராபாத்தை சேர்ந்த சையது உசேன் ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சென்னையில் நிறுவனம் தொடங்கி ரூ.1.5 கோடி மதிப்பு லேப்டாப், கணினி உள்ளிட்ட பொருட்களை பெற்றுக் கொண்டு பணம் தராமல் மோசடி செய்தது தொடர்பான குற்ற வழக்கின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர்களை கைது செய்தனர். சென்னை ஆயிரம் விளக்கு மற்றும் சிட்லபாக்கம் காவல் நிலையங்களிலும் பெங்களூரிலும் இவர்கள் மீது பல வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேபோல் சென்னை நெற்குன்றம் மோகன்ராஜ் என்பவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி பண மோசடி செய்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதேபோல் சென்னை திருவல்லிக்கேணி கார்த்திக் மற்றும் ஆகாஷ், மயிலாப்பூர் தமிழரசன் ஆகிய மூவரும் அஜித்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் மெரினா போலீசாரால் கைது செய்யப் பட்டிருந்தனர். ஜலாலுதீன் கான், சையது உசேன், மோகன்ராஜ், கார்த்திக், ஆகாஷ், தமிழரசன் ஆகியோரை, அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களின் தரவு மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், குண்டாஸில் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர காவல் குழுவினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள். கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், உயிர்காக்கும் மருந்துகள். போதை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
– விகடகவி எஸ். கந்தசாமி –