
கடலோரப் பாதுகாப்புப் படையின் தீவிரவாதத் தடுப்பு ஒத்திகையை பொதுமக்கள் உண்மையென்றே நம்பி வியந்த சம்பவம் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தை நோக்கி விசைப்படகு ஒன்றில் மர்ம நபர்கள் சிலர் ஊடுருவல் செய்ய வருவதை அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த கடலோர பாதுகாப்பு குழு கண்டுபிடித்தது. அதன் நீட்சியாக ரோந்து படகுமூலம் மர்ம நபர்களை விரட்டிச் சென்றது. இதைக் கண்ட அந்தப்பகுதியில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பதற்றம் ஆகினர். விசைப்படகை மடக்கி பிடித்து கடலோர பாதுகாப்பு குழுவினர், 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்து கரைக்கு அழைத்து வந்த பின்னர் தான் அத்தனையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என தெரிந்தது.
2008 -ஆம் ஆண்டு கடல் மார்க்கமாக மும்பைக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்திய கடற்கரை முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, ஆண்டுதோறும் தமிழகக் கடற்கரை பகுதிகளில் சாகர் கவாச்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் போல் விசைப்படகில் அதானி துறைமுகம் உள்ளே ஊடுருவது போல் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது போலி வெடிகுண்டு என்பதும் தெரியவந்தது, இதேபோன்று பழவேற்காடு பகுதியில் இருசக்கர ஊர்தியில் ஊடுருவ முயன்ற இருவர் உள்ளிட்ட தீவிரவாதிகள் போல் வேடமிட்டு ஒத்திகையில் ஈடுபட்ட 11 பேர் கடலோர பாதுகாப்புகுழுமத்தினர், மற்றும் காவல் துறையினரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
P.K.M

