விஷவாயு கசியும் தனியார் பள்ளி | அலறும் பெற்றோர்|

வாயுகசிவு அறிக்கை தாமதமாவதால் பள்ளிக்கூடத்தை திறக்கமுடியாத சூழ்நிலை இருக்கிறது என்பதுதான் புதிய தகவல். என்ன தகவல், எந்த பள்ளி, என்ன வாயு கசிகிறது, கேட்கத் தோணுகிறதா? உறுதியாய் தோணும். எல்லோர் வீட்டிலும் பிள்ளைகள் இருக்கிறார்களே, தோணாமல் போகுமா ?

சென்னை திருவொற்றியூர், கிராமத்தெருவில் அமைந்திருக்கிறது, வாயுகசிவுக்கு காரணமான அந்த தனியார்பள்ளி. பள்ளியின் பெயர் விக்டோரியா.
ஆயிரக்கணக்கில் மாணவ மாணவியர் பயிலும் இந்தப்பள்ளியில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி ஒவ்வாமை, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற காரணங்களால் 30க்கு மேற்பட்ட மாணவ மாணவியர் திடீரென பள்ளிக்கு உள்ளேயே மயங்கி விழுந்தனர். உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ சிகிச்சையில் பிள்ளைகள் இருப்பதை டிஜிட்டல் சோஷியல் மீடியா மூலமாகவும், உள்ளூர் கதைசொல்லி ஆள்கள் மூலமாகவும்தான் பெற்றோர்கள் அறிந்து கொண்டனர் என்பது அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு சாபம் விட்டதன் மூலம் அறிய முடிந்தது. அப்படி, அவர்கள் விட்ட சாபங்களில் சொல்லக்கூடிய அளவிலான சிலவற்றை தருகிறோம்.

ஒருநாள் பீஸ் லேட்டாச்சுன்னா சும்மாவா இருக்கீங்க?
ஸ்கூலுக்கு கண்ணு திருஷ்டி பட்டுப்போச்சி, யாரோ செய்வினை வெச்சுட்டாங்கன்னு சர்சு பாதர்ங்களை கூட்டியாந்து ஜெபக்கூட்டம் போடறீங்களே, எங்க புள்ளைங்களுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு எப்பவாச்சும் அப்படி ஜெபக்கூட்டம் போட்டுருக்கீங்களா?
நம்பித்தானே புள்ளைங்களை படிக்கறதுக்கு அனுப்பறோம், எந்த ஆஸ்பிட்டல்ல புள்ளைங்கள சேத்திருக்கோம்னு கூட எங்களுக்கு போன் போட்டு தகவல் சொல்ல முடியாம போச்சா?எதுவாயிருந்தாலும் கோர்ட்ல பாத்துக்கறோம், எங்க வக்கீல் பாத்துப்பாருன்னு சொல்வீங்களே, புள்ளைங்க போயி சேந்துடுச்சுன்னா எந்த வக்கீல்யா அதுக்கு பொறுப்பு? இந்த மாதிரி கியாஸ் லீக் ஆவுறது, இது முதல் தடவை இல்லையே, அடிக்கடி இப்படித்தானே ஆவுது, எப்பக் கேட்டாலும் ஆயில் கம்பெனிங்க, கியாஸ் கம்பெனிங்க மேல பழியைப் போடறீங்களே நீங்க நல்லா இருப்பீங்களா? இப்படித்தான் அந்த சாபங்கள் நீண்டது.

பெற்றோர்களின் பள்ளி முற்றுகை போராட்டத்தால் பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் என பல்வேறு துறையினர் நேரடியாக சென்று பள்ளி ஆய்வகத்தில் வைக்கப்பட்டிருந்த ரசாயனம் கசிந்ததால் மாணவிகள் மயக்கமடைந்தனரா, அல்லது அருகில் உள்ள தொழிற்சாலைகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து கசிந்த விஷ வாயு காற்றில் பரவி அதன்மூலம் மாணவர்கள் பாதிக்கப்பட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். ரசாயன கசிவோ கசிவோ அல்லது விஷவாயு தாக்குதலோ ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்ற அறிக்கையின் அடிப்படையில் ஒரு வாரத்திற்கு பின்னர், நவம்பர் 4-2024 அன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. எந்த அடிப்படையில் பள்ளியை திறந்தீர்கள், பள்ளிக்கூடத்தில் எல்லாவற்றையும் சரி செய்து விட்டீர்களா என்று மாணவர்களின் பெற்றோர்கள், மீண்டும் வாக்குவாதத்தில் இருந்தபோதே, பள்ளியில் மாணவியர் சிலர் மயங்கி விழுந்துள்ளதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து வெளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோர்கள் பதறிப்போய் பள்ளிக்குள் ஓடினர் அங்கே விழுந்து கிடந்த மாணவியரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்தமுறை மாசுகட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சி, தீ அவிப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் போலீசாருடன் பேரிடர் மேலாண்மைப்பிரிவு அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனர். தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி. சங்கர், “ஏற்கெனவே பிரச்சினை ஆச்சுல்ல, யாரை கேட்டு அனுமதி வாங்கி மறுபடி ஸ்கூலை திறந்தீங்க, முதல்ல ஸ்கூலை மூடுங்க” என்று கோபப்பட்டார். அனுமதி கொடுத்தது இவர்தான் என்று ஒருவரை நோக்கி பள்ளியின் நிர்வாகி கை காட்டிய இடத்தில் யாருமே இல்லை என்பதால், ஏரியா உதவி போலீஸ் கமிஷனரும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் டென்சனாகி, “யாரை மேடம் சொல்றீங்க, ஆளைக் காட்டுங்க” என்று ஆர்ப்பாட்டக் கூட்டத்தை விலக்கி விட்டுப் பார்த்தபோது, அங்கே டி.எச்.ரோடு இருந்தது, ஒரு பேருந்து போய்க் கொண்டிருந்தது, அதை முந்திப்போக ஒரு ஆட்டோ டிரைவர் தீவிர முயற்சியில் இருந்தார். தொப்பியைக் கழற்றாமலே தலையை சொரிந்து கொள்கிற நிலைமைதான் போலீசுக்கு இருந்தது.

ஏற்கனவே நடந்த சம்பவத்திற்கு ரசாயனமோ, விஷவாயு கசிவோ காரணம் அல்ல என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அரசிடம் அறிக்கை அளித்துள்ள நிலையில் மீண்டும் அதே போன்று சம்பவம் நடந்துள்ளதால் விஷவாயு கசிவுக்கு பின்னால் இருக்கும் உண்மைத்தன்மையை அறிய முடியாத சூழல் உண்டாகியுள்ளது.

இது ஒருபக்கம் இருக்க, அருகிலுள்ள மணலி, மணலி புதுநகர், எண்ணூர் போன்ற இடங்களில் இருக்கும் எம்.ஆர்.எல்., எம்.எஃப்.எல்., பால்மர் லாறீ உள்ளிட்ட மத்திய அரசின் உரம் மற்றும் வாயு- டீசல் நிறுவனங்கள் வெளியிடும் புகை மாசுவும் விஷவாயுவும் ஆகாய மார்க்கமாக கூடு கட்டி, குறிப்பிட்ட இந்த பள்ளிக்குள் மட்டும் இறங்குகிறது என்று அங்கிருந்த சிலர் திரைக்கதை வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தனர். மணலி, மணலி புதுநகர், சாத்தாங்காடு, சாத்துமாநகர், கிராமத்தெரு, சண்முகபுரம், மாட்டுமந்தை, தேரடி, மாட்டுமந்தை, எர்ணாவூர், எண்ணூர், கத்திவாக்கம் என்று சுற்றுப்புற வாசிகள் பலரை நேரில் சந்தித்து, விஷவாயுகசிவு குறித்து பேசியபோது, “எப்பவாச்சும் லேசா எண்ணை வாசனை காத்துல வரும் தம்பி, இவ்ளோ கம்பெனிங்க சுத்தியும் கிடந்தா, அந்த வாசனை கூடவா வராது” என்றனரே தவிர, யாரும் விஷவாயு கசிவு குறித்து பேசவே இல்லை.

நமக்கு இன்னொரு கேள்வியும் இருக்கிறது. தொடக்கப்பள்ளி ஒன்றை தொடங்கிட எல்லாவிதமான கட்டமைப்பையும் உருவாக்கிடும் அளவு வசதியை கையில் வைத்துக் கொண்டு பரந்து விரிந்த நிலப்பரப்பில் நின்றபடி ஸ்கூல் பெர்மிஷனுக்காக காத்துக்கிடக்கும் பலரை அறிவேன்.
அதேவேளையில், பார்க்கிங் வசதியோ, பாதுகாப்பு அம்சமோ இல்லாமல் உயர்நிலைப்பள்ளி வரையில் அமைத்துக் கொள்ளும் சூழலை ஒரு சிலருக்கு மட்டும் உருவாக்கிக் கொள்ள ஒரு அரசாங்கம் அனுமதிக்கிறது என்றால், அது மக்களுக்கான அரசாங்கமாக ஒரு போதும் இருக்கமுடியாது மக்களே.

P.K.M

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *