ஐம்பத்தியேழு வயதில், அதுவும் ஹீரோவாக அறிமுகமா ? என்ற எள்ளல் அல்லது ஆற்றாமை கேள்விக்கு, ‘இவ்வளவு நாட்கள் கடின உழைப்பில் கவனம் செலுத்தி காசு சேர்த்தேன், காசு பணம் சேர்ந்ததும் நானே படம் எடுத்து நடிக்கிறேன், இதனால் யாருக்கும் நான் தொல்லை இல்லையே’ என்று பளிச்சென பதிலளித்தார், ’தி லெஜண்ட்’ ஹீரோ அண்ணாச்சி.
அண்ணாச்சியின் நடிப்பு குறித்து சோஷியல் மீடியாக்களிலும் ஊடகங்களிலும் எழுந்த விமர்சனங்கள், எல்லை மீறியவை. மனித மனங்களில் படிந்து கிடக்கிற வன்மத்தைதான் அப்படியே அவை வெளிப்படுத்தின.
ரசிப்புத் தன்மை என்ற எல்லைக் கோட்டில் நின்று கொண்டு, ‘நான் அவர் ரசிகன், நான் இவர் ரசிகன்’ என்று அடையாளப்படுத்திக் கொள்கிற கண்மூடித் தன்மையால், பிறரை எப்போதுமே மனிதனாகக் கூட பார்க்கமுடியாது என்கிற போது, நடிகனாக பார்ப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது.
இன்றைய பிரபலங்கள், ஸ்டார் வேல்யூ நடிகர்கள், முதல் படத்திலேயே ஜொலித்த செவாலியே சிவாஜிகணேசன் போல் பட்டையக் கிளப்பியவர்களா என்று பார்த்தால், ஒருவர் கூட அதில் தேற மாட்டார்கள். குறைந்தது பத்து தயாரிப்பாளர்களை கோடியிலிருந்து லட்சத்துக்கு இறக்கி விட்டுத்தான், நடிகன் என்ற தகுதிக்கு வந்திருப்பார்கள்.
”இன்னாது அண்ணாச்சி ஆடிப்பாடுற ஒரு பாட்டுக்கு இத்தனை சட்டையா, இத்தனை வெளிநாடா, இவ்வளவு மேக்கப்பா, இவருக்கு இந்த நடிகை ஜோடியா, இவரு ஃபைட் பண்றாரா, இவருக்கு நடிக்க கொஞ்சம் கூட வரலியே, இந்த நேரத்துக்கு கடையில உட்கார்ந்து வியாபாரத்தைக் கவனிச்சிருந்தா நிறைய சம்பாதிச்சிருப்பாரு” – இப்படிப்பட்ட விமர்சனங்கள் மட்டுமே ஓரளவு தரமானவை என்று நான் பார்க்கிறேன்… அந்தளவுக்கு, தி லெஜண்ட் சரவணா அண்ணாச்சி மீது பாய்ந்து கடித்துக் குதறியிருக்கிறார்கள், விமர்சனப் புலிகள்.
ஏற்கெனவே திரைத்துறையில் கோலோச்சி நிற்கும் உறவுகளின் பின்புலத்தில் பத்து படங்கள் வரை, பின்னால் நின்று தள்ளித் தள்ளி முன்னேறியவர்கள்தானே இன்றைய மாஸ் ஹீரோக்கள் ? ஒரு பக்கம் இப்படியான செயற்கை வளர்ச்சி, இன்னொரு பக்கம் ஏதாவது சாதிய – மத ரீதியான உறவுப் பாசத்தால் தயாரிப்பாளர்கள் – டைரக்டர்கள் தூக்கிப் பிடித்து நிறுத்தி கொண்டாடி முட்டுக் கொடுத்த வளர்ச்சிதானே, பிற்கால ஹீரோக்களின் நிஜ வளர்ச்சி !
’படம் பத்து நாள்கூட ஓடாது’ என்று சில கமெண்டுகளைப் பார்த்தேன், ஓடாமலேயே போகட்டும்; உங்கள் நல்ல எண்ணங்களுக்கு கோடானுகோடி வாழ்த்துக்கள்…
தன்னுடைய விற்பனைப் பொருட்களுக்கும், தன்னுடைய வணிக மையத்துக்கும் ‘மாடலிங்’ உதவியை நாடி நின்ற பல நூறு நிறுவனங்களுக்கு மத்தியில், முதல் முறையாக தானே ‘மாடல்’ ஆக நின்றவர், லெஜண்ட் சரவணன். அது மட்டுமா, சூப்பர் ஹீரோ, ஹீரோயின்களை துணை நடிகர்களாக அதே விளம்பரத்தில் நடிக்க வைத்து அனைவரையும் வியக்க வைத்தார். விமர்சனங்கள் அப்போதும் டஜன் கணக்கில் வரிசை கட்டியது. காலம் அதற்கான பதிலை சம்மட்டி அடியாக திருப்பிக் கொடுத்தது. லெஜண்ட் சரவணன் அண்ணாச்சியைப் பின்பற்றி, அதன்பின் பல வணிக முதலாளிகள், தாங்களே மாடலிங் ஆக தங்கள் நிறுவனத்துக்கு போஸ் கொடுத்தார்கள்; விமர்சகர்கள் மௌனத்துக்குப் போனார்கள்… ’உங்களுக்கெல்லாம் என்னய்யா பிரச்சினை?’ என்றுதான் கேட்கத் தோணுகிறது…
சென்னை லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸில் வேலை பார்க்கும் யாராவது ஒரு ஊழியரை அழைத்து, ‘அண்ணாச்சி எத்தனை மணிக்கு, அவரோட ரூமுக்கு லிப்ட்டில் போவாரு?’ என்று மட்டும் கேட்டுப் பாருங்கள்.
”ஒவ்வொரு மாடியா படிக்கட்டில் ஏறி ஏறிதான் எட்டாவது மாடியில் இருக்குற அவரோட ரூமுக்குப் போவாரு” – என்றுதான் சொல்வார்கள். விமர்சக கடப்பாரைகளே, அண்ணாச்சியின் ஐம்பத்தியேழு வயது வேண்டாம், அதில் ஏழு வயது குறைவாக இருக்கும் இன்றைய ஹீரோக்களில் எத்தனை பேருக்கு லிப்டைப் பயன்படுத்தாமல் படிக்கட்டு வழியே எட்டாவது மாடிக்குப் போகும் ஆரோக்கியம் இருக்கிறது என்று விசாரித்துச் சொல்லுங்களேன் கொஞ்சம்… அப்படியே அந்தளவு ஆரோக்கியம் இருந்தாலும், தினமும் எட்டாவது மாடிக்குப் போக படிக்கட்டை அவர்கள் பயன்படுத்துவார்களா என்று கேட்டுப் பாருங்களேன்…
ந.பா.சேதுராமன்