
சென்னை பாடியநல்லூரில் செம்மர கடத்தல் வழக்கில் ஜாமீனில் வந்திருந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரை சேர்ந்தவர் பார்த்திபன் (54) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுகவில் அம்மா பேரவையின் இணைச் செயலாளர்.
இன்று காலை வழக்கம் போல் ‘வாக்கிங்’ போக வீட்டில் இருந்து புறப்பட்டு அதே பகுதியிலுள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் வழக்கமான ‘வாக்கிங்’ பயிற்சியை தொடங்கிய நிலையில் சீறியபடி மூன்று மோட்டார் சைக்கிள்களில் டபுள்ஸ் வந்த ஆறு பேர், பார்த்திபனை சுற்றி வளைத்துள்ளனர்.
அடுத்த சில நிமிடங்களில் சரமாரியாக பார்த்திபனை அரிவாள் மற்றும் கத்திகளால் வெட்டியும் குத்தியும் கீழே சாய்த்தனர். பின்னர் அதே வேகத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றுவிட்டனர்.
சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்த்திபனை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு பார்த்திபனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
செங்குன்றம் போலீசார் பார்த்திபன் உடலை மீட்டெடுத்து உடற்கூராய்வு (போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்/ PM Report) அறிக்கை பணிக்காக, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். பார்த்திபன்
வாக்கிங் போன பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுக் காட்சிகளை போலீசார் தீவிரமாக சேகரித்து வருவதால் கொலையாளிகள் விரைவில் பிடிபடலாம் என தெரிகிறது. பார்த்திபன் மீது செம்மரக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், ஆந்திர மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு ஏற்கனவே குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பான ஒன்று.
ரியல் எஸ்டேட், செம்மரக் கடத்தல், உட்கட்சித் தேர்தல் பகை, ரவுடியிசம் என நான்கு முனையிலும் எதிர்ப்பை சம்பாதித்து வைத்துள்ள பார்த்திபன், பாதுகாப்பற்ற முறையில் பொது இடத்தில் வாக்கிங் போனதுதான் கழுத்துக்கு மாலையாக கத்தியை கொண்டு வந்துவிட்டது.
செல்வா அ
-சேரான்369
