திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்கரப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் சவுடுமண் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நான்குவழி சாலை விரிவாக்க பணி திட்டத்திற்காக மண் எடுப்பதாக கூறப்பட்டாலும், தனியார் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காகவே நாள்தோறும்
சட்ட விரோதமாக நூற்றுக் கணக்கான சரக்கு லாரிகளில் சவுடுமண் கொண்டு
செல்லப்படுகிறது.
இந்நிலையில் ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரக்கு லாரி ஓட்டுனர்கள் பிரகாஷ் (31) சூர்யா (29) ஆகியோர் இந்தக்குவாரியில் இருந்து சவுடு மண் ஏற்றிக்கொண்டு
வெளியில் வரும் பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கி கொண்டனர். அப்போது சூர்யா தனது சரக்கு லாரியில் வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து பிரகாசை, மூர்க்கத்தனமாக வெட்டியதில் நிகழ்விடத்திலேயே பிரகாஷ்,
பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் அங்கு வந்த பெரியபாளையம் போலீசார், பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணையை தொடங்கினர்.
கொலை செய்யப்பட்ட பிரகாஷ் மீது வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதும், கொலைசெய்து விட்டு தலைமறைவான ஓட்டுனர் சூர்யாவின் பூர்வீகம் கிருஷ்ணாபுரம் கண்டிகை
என்பதும் தெரியவந்தது. பிரகாசுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக குடும்பத்துடன் ஆத்துப்பாக்கம்
கிராமத்தில் சூர்யா குடியேறியுள்ளார். நட்பாகத்தான் இருவருமே இருந்துள்ளதால், இந்தக்
கொலையின் பின்னணி என்னவென போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
ஆற்று மணல் சவுடு மணல் போன்றவற்றை முறைகேடாக அள்ளிச்செல்லும் கும்பலுக்கு
பல அதிகாரிகள் துணையாக இருந்து வழி நடத்தி வருவது தெள்ளத்தெளிவு என்பதால் இது தொழில் போட்டிக்கான கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
நம்பி