பொதுமக்களிடமிருந்தும் ஓடும் பேருந்தில் பயணிகளிடமிருந்தும் செல்போன் திருட்டிலும் வழிப்பறியிலும் ஈடுபட்ட ஐவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்துக்கு பயன்படுத்திய 1 டூவீலர் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. 108 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் (தெ) டாக்டர் என். கண்ணன், இணை கமிஷனர் (கி) பிரபாகரன் மற்றும் துணை கமிஷனர் (கீழ்பாக்கம்) கார்த்திகேயன் தலைமையில் செல்போன் திருட்டு தடுக்கும் தனிப்படை, போலீஸ் கமிஷனரால் அமைக்கப்பட்டது. திருடு போன, பொதுமக்களின்
செல்போன் IMEI களை ஆராய்ந்ததில் பெரும்பாலும் பேருந்துகளில் அவை ஜேப்படி செய்யப்பட்டது தெரியவந்தது. மாநகர பேருந்துகளில் பயணம் செய்து பிக்பாக்கெட் முறையில் திட்டமிட்டு அவைகள் தொடர்ச்சியாக திருடப்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் சென்னை கொருக்குப் பேட்டையைச் சேர்ந்த உமாபதி, சரவணன். விநாயகம், நரேஷ், உமர் பாரூக் ஆகிய 5 நபர்கள் இதில் சிக்கினர். போலீசார் விசாரணைக்குப் பின் அவர்களை கைது செய்தனர். களவு பொருட்கள் மீட்கப்பட்டது.
கடந்த ஆறு மாத காலமாக சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களை நோட்டமிட்டு செல்போன்களை திருடியதும், திருட்டுக் குழுவின் தலைவனாக உமாபதி செயல்பட்டு வந்துள்ளதும் தெரியவந்தது.
– விகடகவி எஸ். கந்தசாமி.