சென்னை அருகே முகமூடி கொள்ளை கும்பல்…

திருவள்ளூர் மாவட்டத்தில் முகமூடி கொள்ளையர்கள், கோவில் மதில் சுவரேறி குதித்து கருவறை பூட்டை உடைத்து, கொள்ளை அடிக்க முயற்சித்தது, சிசிடிவியில் பதிவானதோடு அது, சமூக வலைதளங்களில் பரவியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோவிலின் மதில் சுவரேறி குதித்து கடந்த (2023- ஜூன்) 24ஆம் தேதி முகமூடி கொள்ளையர்கள் மூன்று பேர் கோவிலுக்குள் புகுந்தனர். ஒருவன் கருவறையின் கதவில் இருக்கும் பூட்டை கடப்பாரையால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சிக்க, மற்ற இருவர் மறைந்திருந்து ஆள் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

கருவறையின் பூட்டை இறுதிவரை உடைக்க முடியாததால் முகமுடி அணிந்த மர்ம நபர்கள் மூன்று பேரும், தங்களது முயற்சியை கைவிட்டு அங்கிருந்து ஏமாற்றத்துடன் கோவிலில் இருந்து வெளியேறி சாலையில் நடந்து செல்லும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது (வாட்ஸ்அப்) சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, கோவிலின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி அணிந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாயோன்நம்பி

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *